Tamil News  /  Tamilnadu  /  Nia Raids And Other Trending News For Tamil Nadu On September 22

NIA raids, RSS: என்ஐஏ சோதனை, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி - முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள் - செப்டம்பர் 22
முக்கிய செய்திகள் - செப்டம்பர் 22

தமிழகத்தில் என்ஐஏ சோதனை, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர், ரயில்வே நிர்வாகத்திடம் ரூ. 3 கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு மாணவிகள் விடுதியில் நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் போண்டா மணியின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற போதுமான இடத்தை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 6 முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தருமபுரியில் வீடு மாற்றும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தனர்.

அரசுப்பள்ளிகளில் 6ஆம் முதல் 9ஆம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலக கலவர வழக்குத் தொடர்பாக முன்ஜாமீன் பெற்ற இபிஎஸ் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 63 பேர் இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றனர்.

சீரடி ஸ்ரீசாய்பாபாவின் மகா சமாதி யாத்திரை, தீபாவளி புனித நீராடல் நிகழ்வுகளை சுற்றிப்பார்க்க தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு உலா ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் சங்கு வளையல், சுடும் மண்ணால் ஆன முத்திரை, செப்பு காசு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு உடைந்துள்ளதற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

"உங்கள் துறையில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் டிஜிபி அலுவலகம் சென்று காவலர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

திருவாரூர், முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் தங்க நகையை திருடிய மணப்பெண்ணின் தோழி கைது செய்யப்பட்டார்.

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

கோவையில் திமுக கவுன்சலரின் கணவர், சுகாதார அலுவலகத்தில் பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,675-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடலூரில் 15 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்த புகாரில் 24 வயதான தீட்சிதர், தந்தை கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலைக்கான தமிழ்நாட்டில் 73,99,512 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்தவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திரப் பெருவிழாவின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை கண்காட்சியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார்.

டாபிக்ஸ்