NIA Raids: பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி..சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
சென்னையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை மண்ணடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல ஓட்டலில் கடந்த 1ஆம் தேதி சக்தி குறைந்த குண்டுவெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 10 காயமடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பெங்களூரு, தார்வாட், ஹுப்ளி ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவரின் அடையாளங்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் வரைந்துள்ளனர். ஆனால், சிசிடிவியில் காணப்படும் நபரை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு பின்னணியில் எந்த பயங்கரவாத அமைப்பு இருக்கிறது?, என்ன காரணத்திற்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த மர்மநபர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலை தேர்வு செய்தார் என்பன போன்ற விஷயங்கள் தெரியாமல் மர்மமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர்.
இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மண்ணடி, முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இதைபோல ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதிகளிலும் என்ஐஏ சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
