New Voter Id: புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - சத்யபிரத சாகு
பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு அட்டைகள் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் பற்றி சத்யபிரத சாகு கூறியதாவது:
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த புதிய வாக்காளர் அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன. இந்த புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதுவரை வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம், இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும். அடையாள அட்டை முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது நெகட்டிவ் இமேஜ் போன்ற படமும் இடம்பெறும். போலியான அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளது.
தற்போது முதல்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு இந்த புதிய அடையாள அட்டை வழங்கப்படும். பழைய வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரம் அனைத்து வாக்குசாவடிகளிலும் பொருத்தப்படும் என கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படைகள், மூன்று கண்காணிப்பு குழுக்கள் வருமான வரி அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வாங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்கிடையே இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கவுள்ளது.