Namakkal : ‘10 கொலைகள் செய்த தலைமறைவு குற்றவாளி’ போலி சாமியாராகி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியபோது லபக்கிய போலீஸ்’
பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய, குற்றவாளி சாமியார் வேடத்தில் சீடர்களுடன் சுற்றி வந்தபோது குமாரபாளையத்தில் போலீசார் கைது செய்தனர்.
என்ன தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு இப்போதெல்லாம் எளிதாக தப்பிக்க ஒருவழியை ஏமாற்றுப்பேர்வழிகள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். சாமியார் வேஷம் போட்டுக்கொள்கிறார்கள். சாமியார் வேஷம் போட்டு அனைத்து திருட்டு வேலைகளும் செய்வது அல்லது அனைத்து திருட்ட வேலைகளும் செய்துவிட்டு சாமியார் வேஷம் போட்டுக்கொள்வதெல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. நாமக்கல்லில் அதுபோல் ஒரு போலி சாமியார் சிக்கியுள்ளார். அதுகுறித்த செய்திதான் இது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவி உடையில் சாமியார் போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவர் 2 சீடர்களுடன், வழியில் உள்ள கடைகளில் புகுந்து அங்குள்ளவர்களுக்கு திருநீரு பூசி ஆசி வழங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இந்த மூவரின் நடவடிக்கைகளிலும் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தடுத்து விசாரித்தனர். இதில் சாமியார் தோற்றத்திலிருந்த நபர், தனது பெயர் ஜிக்லினத் அகோரி என்று கூறி, காசியில் உள்ள அகோரியிடம் பயிற்சி பெற்றதற்கான அடையாள அட்டையை கொடுத்துள்ளார்.
ஆனாலும் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் தீர்ந்தபாடில்லை. போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் சாமியார் வேடத்தில் இருந்தவர், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த முஸ்தபா என்ற முகமது ஜிகாத் (36) என்றும், இவர் மீது சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, திருப்பூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் 10 கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கொலை வழக்குகளில் போலீசார் தேடி வந்ததையடுத்து, காசியில் சில ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததும், அதன்பின்னர் அகோரி என்ற பெயரில் போலி சாமியாராகி, அங்கிருந்து திருச்சியை சேர்ந்த பெண் கலைமணி (45), கடலூரை சேர்ந்த சீனிவாசன் (35) ஆகியோரை தனது சீடர்களாக்கி, தமிழ்நாட்டில் பல இடங்களில் தலைமறைவாக சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போலி சாமியாரை கைது செய்து, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, போலி சாமியாரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.