Nagai MP Selvaraj Passed Away: நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்!
Nagai MP Selvaraj: நாகை தொகுதி எம்பியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியுமான செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.
நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினரான நாகை செல்வராஜ், மே 2 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (மே 13) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாளை காலை 10 மணிக்கு எம்.பி.செல்வராஜ் இறுதிச் சடங்கு திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை செல்வராஜ் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பல ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
1975-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராஜ் அவர்கள் சுமார் அரைநூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார். செல்வராஜ் அவர்கள் நான்கு முறை நாகை மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களுக்கு இரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை செல்வராஜ் அவர்கள் முன்னெடுத்துள்ளார். என் மீது கொள்கைரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம்தான் செல்வராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றியிருந்தேன். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் அவர்களது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
4 முறை வெற்றி பெற்றவர்
திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்த செல்வராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 1989, 1996, 1998,2019 என 4 முறை மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றவர். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் வயது முதிர்வு காரணமாக செல்வராஜ் போட்டியிடவில்லை.
பிறப்பு
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அடுத்துள்ள கப்பலுடையான் கிராமத்தில் 1957 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி செல்வராஜ் பிறந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது கடின உழைப்பின் மூலம் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
1989 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996, 1998 நடத்தப்பட்ட மக்களவை தேர்தல்களில் நாகை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019-ல் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் நாகை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் செல்வராஜ். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்