TN BJP: பாஜகவின் ரேடாரில் நாடார்கள்! மத்திய அமைச்சர் ஆகும் தமிழிசை? அண்ணாமலையின் கதி என்ன?
தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலில் உயர்ந்து உள்ள நிலையில், நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
தமிழக பாஜகவில் உட்கட்சித் தேர்தல் நடந்து வரும் நிலையில் இம்மாத இறுதிக்குள் புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பாஜக தேசிய தலைமை சார்பில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார்.
டெல்லியில் வட்டம் அடிக்கும் தமிழிசை!
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநிலங்களின் கவர்னராகவும் இருந்த தமிழிசையை டெல்லிக்கு வர கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உட்பட பல முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்து பேசி உள்ளார்.
நாடார் சமூகத்திற்கு அமைச்சரவையில் இடம்!
தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலில் உயர்ந்து உள்ள நிலையில், நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிப்பதன் மூலம், அவ்வின மக்களிடையே பாஜகவை கொண்டு செல்ல முடியும் என டெல்லி தலைமை நம்புகிறது. இந்த அடிப்படையில்தான் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவியும், முன்னாள் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்னனுக்கு ஆளுநர் பதவியும் தரப்பட்டு உள்ளது. பாஜக மாநிலத் தலைவராக மீண்டும் அண்ணாமலையே தொடர வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பட்டியல் இன ஓட்டுக்களை குறிவைத்து முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகன் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தரப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் பாஜக செல்வாக்கு செலுத்தி வளர முடியும் என்பது அக்கட்சியின் நம்பிக்கை.
அதே போல், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் கணிசமாக உள்ள இந்து நாடார் இன வாக்குகளை கைப்பற்றும் வகையில் அச்சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்க பாஜக தேசியத் தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
யாருக்கு மத்திய அமைச்சர் பதவி?
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கிக்கான இந்திய மண்டல இயக்குநர் ஜெனரல் ஜெகதீச பாண்டியன், ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜன், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டோரில் ஒருவரை மத்திய அமைச்சராக்க பரிசீலனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பாஜக பெற்று உள்ளது. அதில் இந்து நாடார் சமூக வாக்குகள் கணிசமாக இருந்ததாக உளவுத்துறை, பாஜக மேலிடத்திற்கு தகவல் அனுப்பி உள்ளதாம்.
எண்ணிக்கையிலும், செல்வத்திலும் செல்வாக்கு செலுத்தி வரும் நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவதன் மூலம், அடுத்து வரவுள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்பது பாஜக தலைமையின் திட்டமாக உள்ளதாம்.
தமிழிசைக்கு அதிக வாய்ப்பு?
இரண்டு முறை பாஜக தலைவராகவும், இரண்டு மாநில கவர்னராகவும் செயல்பட்ட தமிழிசை சவுந்தராஜன், பாஜக தேசியத் தலைமையின் பாராட்டுகளை பெற்றவர். கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு பெயர் உடன் தமிழிசை பெயரும் பரிசீலனை செய்யப்பட்டதாக தகவல்கள் அப்போதே வெளியானது.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.