வடசென்னை பட பாணியில் கருத்து கேட்பு கூட்டம்!’சீமானே கிளம்பு’ அதிர்ந்த எதிர்ப்பு கோஷம்! அசால்டாக பேசிய சீமான்!
நீர், உணவு, காற்று ஆகியவை நஞ்சாகிவிட்ட பிறகு வெளிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள். பிணத்தை வைத்து வேண்டுமானால் அழலாம் என சீமான் பேச்சு
எண்ணூர் அனல்மின்நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் பேசும் போது ”சீமானே கிளம்பு, சீமானே கிளம்பு” என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனல் மின் நிலைய விரிவாக்கம்
எண்ணூர் அனல்மின்நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
பிணத்தை வைத்து வேண்டுமானால் அழலாம்
அப்போது அவர் கூறுகையில், மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்வது என்ற கேள்வி சரிதான். ஆனால் மின்சார உற்பத்தி செய்ய நிலக்கரி, அணு, அனல் மூலம் மட்டுமே மின்சாரம் செய்ய முடியும் என்றால் அனல் மின்சாரம் குறித்து யோசிக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் சூழலியல் கேடுகள் பற்றி நேரடியாக பார்க்கலாம். உலர் சாம்பல் கொட்டி நிலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. நீர், உணவு, காற்று ஆகியவை நஞ்சாகிவிட்ட பிறகு வெளிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள். பிணத்தை வைத்து வேண்டுமானால் அழலாம். பேசும் எல்லோரும் வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்று பேசுகிறார்கள். சம்பளத்தை வைத்துக் கொண்டு 3 வேலை பசி இல்லாமல் சாப்பிடலாம். ஆனால் குடிக்கும் நீர், சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று நஞ்சாகி போன பிறகு வாழ்வது எப்படி சாத்தியம்.
கடல் அலைகளில் மின்சாரம்
ஜப்பான், ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் கடல் அலைகளில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைக்கு எடுத்த 299 பேரில் ஒருவன் கூட தமிழன் இல்லை. ஆனால் நிலம் தமிழன் உடையது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு 500 ஏக்கர் நிலத்தை கொடுத்தது என் தாத்தன் ஜம்புலிங்க முதலியார்தான்.
தீராத வளத்தில் மின்சாரம்
நிலக்கரி உள்ளிட்டவை தீர்ந்துவிடக் கூடிய வளம், ஆனால் காற்று, சூரிய ஒளி, கடல் அலை ஆகியவை தீர்ந்துவிடாத வளம் ஆகும். இயற்கை தாய்க்கு கேடு விளைவிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் எதற்காக அனல், புனல், அணு உலை மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டும். அனல் மின் நிலையம் வேண்டும் என்று கருத்து கூறும் மக்கள், உங்கள் வீட்டை அனல் மின் நிலையத்திற்கு அருகில் கட்டிக்கொண்டு நீங்கள் வாழும் வீட்டை அனல் மின் நிலையம் அருகில் உள்ள மக்களுக்கு கொடுங்கள்.
அதானிக்காக காட்டுப்பள்ளி துறைமுகம்
வ.உ.சி மற்றும் காமராஜர் துறைமுகத்தில் வேலை நடக்காமல் இருக்கும் போது ஆறாயிரம் ஏக்கரில் காட்டுப்பள்ளியில் துறைமுகம் எதற்கு என்று கேட்க வேண்டும். அதை கட்டுபவர் அதானி. கேரளாவில் அணு உலை கூடாது என்ற போது அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன. சூழலுக்கு கேடு இல்லாத காற்றாலை, சூரிய ஒளி மின்சார தயாரிப்பை தனியார் முதலாளிகளுக்கு கொடுக்கின்றனர். மின் துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு உள்ளது. நீங்கள் இங்கு காற்றை சுவாசிக்கவில்லை. கந்தக துகள்களையே சுவாசிக்கின்றனர் என பேசினார். அனல் மின் நிலையம் விரிவாக்கம் வேண்டும் என கோரும் நபர்கள் “சீமானே கிளம்பு! அனல் மின் நிலையம் வேண்டும்” என சீமான் பேசும் போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.