Seeman vs Kanimozhi: கனிமொழி பெரியாரிஸ்ட்டா?.. கடுமையாக விமர்சித்த சீமான்.. திடீரென ஜெயலலிதாவை புகழ்ந்தது ஏன்?
Seeman vs Kanimozhi: தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது தூத்துக்குடியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி இரண்டு முறை போட்டியிட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Seeman vs Kanimozhi: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பெரியாரை இழிவுபடுத்தும் கூலிகளை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளது என கனிமொழி பேசியுள்ளார். பெரியாரை எதிர்த்து அரசியல் செய்யும் கூலிகள் என கனிமொழி தனது தந்தை கருணாநிதியையும், அக்கட்சியின் தோற்றுநர் அண்ணாவையும் தான் சொல்கிறார். காரணம், நான் பெரியாரை இழிவு செய்யவில்லை. அவர் என்ன பேசியிருந்தாரோ, எழுதினாரோ அதை எடுத்துப் பேசுகிறேன்.
கனிமொழி உட்பட அனைவரும் பெரியாரை பற்றி பேசுகிறார்கள். ஆனால், பெரியார் என்ன பேசினார், என்ன எழுதினார் என்பதை எடுத்துப் பேசத் துணிவு இல்லை. தமிழ்நாட்டில் பெரியாரை திமுகவின் தலைவர் அண்ணா, கருணாநிதி ஆகியோரை விட யாராவது இழிவாக பேசியிருக்கிறார்களா?
கனிமொழி பெரியாரிஸ்ட்டா?
கனிமொழி ஒரு பெரியாரிஸ்ட்டா?.. உங்கள் மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீர் பூசினீர்களா இல்லையா? நீங்கள் ஒரு கடவுள் மறுப்பாளரா அதை ஏற்க வேண்டுமா?. பெரியார் எங்கு சமூக நீதியை நிலைநிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது தூத்துக்குடியில் நீங்கள் இரண்டு முறை போட்டியிட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா?.. நீங்கள் பெரியாரை பற்றி பேச தகுதி இருக்கிறதா?. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு என்ன நீதியைப் பெற்றுத் தந்தீர்கள்?. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தலைமுறைகளை உருவாக்கியதை தவிர திராவிடக் கட்சியும், பெரியாரும் எந்த சாதனையையும் செய்யவில்லை.
இதுதான் உங்கள் சமூகநீதியா?
முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தில் கடவுள் மறுப்பு கடைப்பிடிக்கப்படுகிறதா?. முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பூஜை அறையில் சமஸ்கிருதத்தில் ஸ்லோகம் சொல்கிறார். அத்திவரதர் கோயிலில் குடும்பமாக நின்று கும்பீட்டீர்கள். அதுதான் உங்கள் கடவுள் மறுப்பா?. ஆ.ராசாவை ஏன் நீலகிரியில் நிறுத்திகிறீர்கள். பொதுத் தொகுதியில் அவரை நிறுத்த மறுக்கிறீர்கள்? இதுதான் உங்கள் சமூகநீதியா?.
ஜெயலலிதாவை புகழ்ந்த சீமான்
பெரியார் ஆதரவாளர்கள் சாதிக்காததை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாதி்த்து காட்டினார். பொதுத்தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார் ஜெயலலிதா. அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த தனபாலை சபாநாயகராக்கி உயர்ந்த இடத்தில் அமரவைத்தவர் நீங்கள் சொல்லும் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான்." என்று பேசினார்.

தொடர்புடையை செய்திகள்