"உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன்" மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  "உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன்" மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு!

"உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன்" மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு!

Kathiravan V HT Tamil
Published Jun 23, 2025 10:59 AM IST

"நமது கலாச்சாரம் அழிக்கப்பட முடியாதது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக வேரூன்றியுள்ளது”

"உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன்" மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு!
"உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன்" மதுரை முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு! (PTI)

பவன் கல்யாணின் உரை: முருகன் - உலகின் முதல் புரட்சி தலைவர்

முருகப் பெருமானுக்கு வணக்கம் செலுத்தி தனது உரையைத் தொடங்கிய பவன் கல்யாண், "மதுரை மக்களுக்கும், இந்து முன்னணிக்கும், கந்த சஷ்டி கவசம் பாடிய லட்சோபலக்ஷம் பக்தர்களுக்கும் வணக்கம். என்னை மதுரைக்கு அழைத்தது முருகன். என்னை வளர்த்தவர், துணிச்சல் தந்தவர் வெற்றிவேல் முருகன்," என்றார்.

மதுரையின் ஆன்மீக முக்கியத்துவம்: 

"மதுரை முருகனுக்கு நெருக்கமானது. முருகனின் முதல் அறுபடை வீடு (திருப்பரங்குன்றம்) மற்றும் கடைசி அறுபடை வீடு (திருத்தணி) மதுரையைச் சுற்றியே உள்ளன. மீனாட்சி அம்மன் (முருகனின் தாய் பார்வதி) மற்றும் சிவபெருமான் (முருகனின் தந்தை) இங்கு வீற்றிருக்கின்றனர். இத்தகைய புண்ணிய பூமியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகனின் அவதாரமாக அவதரித்தார்," என்று பவன் கல்யாண் பெருமையுடன் கூறினார்.

மதுரையின் இருண்ட காலம்

14ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் மதுரையை சூறையாடியதால் மீனாட்சி அம்மன் கோவில் 60 ஆண்டுகள் இருளில் மூழ்கியிருந்ததாகவும், விஜயநகர் இளவரசர் குமார கம்பனன் அதனை மீட்டெடுத்து ஒளி ஏற்றியதாகவும் குறிப்பிட்டார். "நமது கலாச்சாரம் அழிக்கப்பட முடியாதது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக வேரூன்றியுள்ளது," என்றார்.

முருகன் - புரட்சி தலைவர்

"அறம் என்பது தீமையை அறுப்பது, எல்லோரையும் சமமாக நடத்துவது, தீயவர்களை வதம் செய்வது. இதுவே புரட்சி. உலகின் முதல் புரட்சி தலைவர் முருகன். அநீதியை அழித்து, சமத்துவத்தை நிலைநாட்டியதால் அவர் புரட்சி தலைவர்," என்று பவன் கல்யாண் உணர்ச்சி பொங்க பேசினார். "இந்த மாநாடு முருகனுக்காக, உலகின் முதல் புரட்சி தலைவருக்காக நடக்கிறது," என்றார்.

பிரிவினை சிந்தனையை எதிர்த்து

சிலர் "முருகர் மாநாடு ஏன் தமிழ்நாட்டில்? உத்தரப்பிரதேசம், குஜராத்தில் நடத்தலாமே?" என்று கேட்பதை விமர்சித்த பவன் கல்யாண், "இது ஆபத்தான பிரிவினை சிந்தனை. இன்று முருகனை கேள்வி கேட்கிறார்கள், நாளை சிவனையோ, அம்மனையோ கேட்கலாம். இந்த சிந்தனை பல காலமாக உள்ளது. 14 வயதில் சபரிமலை சென்றவன் நான். மயிலாப்பூரில் விபூதி பூசி பள்ளி சென்றவன். ஆனால், இப்போது விபூதி பூசுவதற்கே கேள்வி கேட்கப்படுகிறது," என்றார்.

போலி மதச்சார்பின்மை

"கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், இந்து தனது மத அடையாளத்தை வெளிப்படுத்தினால் மதவாதி என்று முத்திரை குத்தப்படுகிறார். இதுதான் போலி மதச்சார்பின்மை. என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. மற்ற மதங்களைப் பற்றி கேள்வி கேட்க முடியாதவர்கள், ஏன் இந்து மதத்தை மட்டும் கேள்வி கேட்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

முருகனின் உலகளாவிய தன்மை

"முருகன் தமிழ் கடவுள், ஆனால் உலகம் முழுவதும் பரந்தவர். வட இந்தியாவில் கார்த்திகேயனாகவும், ஆந்திரா, கர்நாடகத்தில் சுப்பிரமணியராகவும், தமிழ்நாட்டில் முருகராகவும் வணங்கப்படுகிறார். அவரது பாதம் தமிழ்நாட்டில் ஊன்றியிருந்தாலும், உலகம் முழுவதும் பறந்தவர்," என்று பவன் கல்யாண் கூறினார். "நிறம், ஜாதி பேதமின்றி அகத்தின் வழியாக பார்க்கிறோம். ஆனால், சிலர் கருப்பு நிறத்தை வைத்து கடவுளை கேலி செய்கிறார்கள். கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்கிறார்கள்," என்று விமர்சித்தார்.

அரசமைப்பு சட்டம் மற்றும் மாற்றம்

"அரசமைப்பு சட்டம் நமது அறத்தை காக்கிறது. ஆனால், 75 ஆண்டுகளாக சிலர் நாச சக்திகளை ஆரம்பத்திலேயே அழிக்காமல் வளர விட்டதால் இந்த நிலை. பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்து கடவுள்களை இழிவு செய்கிறார்கள். இது மாற வேண்டும். இந்து தர்மத்தை மதிக்க கோருகிறோம்," என்று பவன் வலியுறுத்தினார்.