’விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடி தந்த 3 லட்சம்! தூக்கி எறிந்த குழந்தையின் தாய்!'
சிறுமி இறந்ததை சொல்லாமல் பள்ளி நிர்வாகம் மூடி மறைத்ததாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் தரப்பட்ட நிதியை குழந்தையின் தாய் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த பெ.பழனிவேல் என்பவரின் 5 வயது குழந்தை லியா லக்ஷ்மி. இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் நேற்று (03.01.2025) பிற்பகல் பள்ளியில் இருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இழப்பீடு அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த விவகாரத்தில் குழந்தையின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷ்மியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்.
நேரில் சென்ற அமைச்சர் பொன்முடி
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் அறிவித்த இழப்பீட்டு தொகையை வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா ஆகியோர் சிறுமியின் தாயாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். சிறுமி இறந்ததை சொல்லாமல் பள்ளி நிர்வாகம் மூடி மறைத்ததாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
பின்னர். அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் சென்ற நிலையில், முதல்வர் தந்த இழப்பீட்டு தொகையை சிறுமியின் தாய் தூக்கி எறிந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.