Top 10 News: அதிமுக மனித சங்கிலி.. தமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு - டாப் 10 செய்திகள்!
Morning Top 10 News: அதிமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் முதல் போதைப்பொருள் விவகாரம் வரை இன்றைய டாப் 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளவை குறித்து பார்ப்போம்.
அதிமுக முன்னணி தலைவர்கள் (கோப்புடம்)
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
- தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்தில் அளிக்க உச்சநீதிமன்றம் கெடுவிதித்துள்ளது. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்க் ஆப் (SBI) இந்தியாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில், இந்த போட்டி நடைபெற உள்ளது. பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்குகிறது.
- இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களுக்கு மார்ச் 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காரைக்கால் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர். மேலும், 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனிதசங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவர்களை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
- பாகிஸ்தானின் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆசிஃப் அலி ஜர்தாரியின் மகள் அசீஃபா புட்டோ அந்நாட்டின் முதன்மை பெண்மணியாக அறிவிக்கப்பட இருக்கிறார்.
- சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
- சென்னையில் 661வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- போதை பொருட்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை உணர்ந்து, இனியாவது திமுக அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து, போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா, அல்லது, ஜாபர் சாதிக்கைப் போல, தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்கப் போகிறதா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- தமிழகத்தில் ரூ.3,111 கோடி மதிப்பிலான 8 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.149 கோடி மதிப்பில் 3 முடிவுற்ற சாலை, பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்கு காணொலியில் திறந்து வைத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.