Sellur Raju: ’வாயிலேயே வடை சுடுவதில் இந்தியாவுக்கு மோடிஜி, தமிழ்நாட்டு க்கு ஸ்டாலின்’ கலாய்க்கும் செல்லூர் ராஜு!
”நீட் ரத்து, கல்விக்கடன் ரத்து, அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய், நகைக்கடன் தள்ளுபடி திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் எதுவுமே செய்யவில்லை. முதலமைச்சர் ஒரே வடையாக சுட்டுக்கொண்டு இருக்கிறார். 15 லட்சம் போடுவோம் என்ற பிரதமர் ஏதும் செய்யவில்லை”

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர் என்றார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை எஸ்.பி.ஐ வங்கி வெளியிட அவகாசம் கேட்டுள்ளது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ், திமுக கட்சிகள்தான் இதில் வருத்தப்பட வேண்டும், எங்களுக்கெல்லாம் இதில் இல்லாததால் வருத்தப்பட வேண்டியதில்லை. மத்திய அரசு இதில் தலையிடுவது போல் தெரிகிறது, இந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கண்ணடித்தால் வராத கூட்டணி கட்சிகள் கையை பிடித்து இழுத்தால் மட்டும் வரவா போகிறது என துரைமுருகன் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு, யாரு கையை பிடித்து இழுக்கிறது, அவர்கள் கூட்டணியை மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் பணம் செலவழிக்க வேண்டும் என்பதால் கூட்டணி கட்சிகள் திமுக உடன் உள்ளன. ஆளும் பாஜகவையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்த நாங்கள் மற்ற கட்சிகளை அழைப்போமா? என்றார்.
