‘திமுக எம்.எல்.ஏ.,களின் அரைவேக்காட்டுத் தனம்..’ தவாக தலைவர் வேல்முருகன் பாய்ச்சல்!
‘சட்டத்திற்கு எதிரான அநியாயத்தை நான் பேசுவேன். கடலூரில் என் கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டு, இன்றோடு 8 நாட்கள் ஆகிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதை முதல்வர் கவனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தேன். ஆனால், அதற்குள்ளாக கூச்சல், குழப்பம் செய்து தடுக்கிறார்கள்’
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பேசியதாவது:
‘‘கடலூர் மாவட்டத்தில் என்னுடைய தொகுதியின் பிரச்னைகள் குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறேன். அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில கோரிக்கை வைக்க முயன்றேன். அப்போது, பின் வரிசையில் இருந்த ஆளுங்கட்சி திமுக உறுப்பினர்கள், என்ன பேச வருகிறேன் என்பதை புரிந்துகொள்ளாமலேயே, நான் வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே, எனக்கு எதிராக கூச்சல், குழப்பம் போட்டு எதிர்ப்புதெரிவிப்பது. ஜனநாயக மாண்பு அல்ல.
அரைவேக்காட்டுத் தனமானது
பேரவை தலைவரும், அவை முன்னவரும், ஆளுங்கட்சி கொறடாவும் இதை கண்டிக்க வேண்டும், இனி கட்டுப்படுத் வேண்டும். அண்ணாநகர் குழந்தை விவகாரத்தில், நான் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் பேச முற்படும் போது, நான் அது தொடர்பாக எனது கருத்தை தெரிவித்த பிறகு, முதல்வர் பதிலளிக்க கோரி நான் பேச முயன்ற போது, உடனே ஆளுங்கட்சி பின்வரிசையில் அமர்ந்திருக்கும் திமுக உறுப்பினர்கள், ‘நான் என்ன பிரச்னைக்கு பேச போறேன்’ என்பதை அறியாமல் அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமாக என்னை எதிர்ப்பது என்பது ஏற்கதல்ல. இது ஜனநாயக மண்புக்கு எதிரானது.
இதை இனி ஆளுங்கட்சி கொறடாவோ, முன்னவரோ, சபாநாயகரோ அனுமதிக்க கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கட்சி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு. அது அதிமுக, திமுக என்கிற உட்கட்சி பிரச்னைக்குள் நான் செல்லவில்லை. சட்டத்திற்கு எதிரான அநியாயத்தை நான் பேசுவேன். கடலூரில் என் கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டு, இன்றோடு 8 நாட்கள் ஆகிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதை முதல்வர் கவனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தேன். ஆனால், அதற்குள்ளாக கூச்சல், குழப்பம் செய்து தடுக்கிறார்கள்.
கூச்சலிடுவது சரியா?
அதே போல அதிமுக பிரமுகர் ஒருவர் அண்ணா நகர் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்புலத்தில் இருப்பது யார் என்பது பற்றி நான் பேசுகிறேன். அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது கூச்சலிடுவது போல, ஆளுங்கட்சி கூட்டணியில், அதுவும் அவர்களின் உறுப்பினராக இருக்கின்ற என்னுடைய பேச்சின் போதும் எதிர்ப்பதும், கூச்சலிடுவதும் சரியா.
இந்த கோரிக்கை, சபையில் பதிவு செய்யப்படவில்லை, அதனால் ஊடகங்கள் வாயிலாக இந்த கோரிக்கையை கொறடா, முன்னவர், சபாநாயருக்கும், அரசின் கவனத்திற்கும் நான் கொண்டு செல்ல விரும்புகிறேன்,’’
என்று செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசினார்