Erode East Bypoll : ‘2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா.. 11 தோல்வி பழனிசாமி..’ அமைச்சர் எ.வ.வேலு கிண்டல்!
‘ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ’11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார்’

Erode East Bypoll : ‘சட்டசபை தேர்தலுக்காவது பழனிசாமி வருவாரா? சூனாபானா கேரக்டர்தான் எடப்பாடி.. மகளிர் பஸ் பயணத்தை’லிப்ஸ்டிக் அடித்து விட்டுள்ளார்கள்’ என்று கொச்சைப்படுத்தி ஒட்டுமொத்த மகளிரையும் கேவலப்படுத்தி விட்டார்’ என்று எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொடர் தோல்வியில் புரட்சித் தமிழர்
‘‘சட்டப்பேரவையில் முதலமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடிய கோழை பழனிசாமி, வெளியே சென்று வழக்கம் போலவே தன் உளறல்களை பேட்டியாக கொட்டியிருக்கிறார். சட்டப்பேரவையில் முதலமைச்சரும் அமைச்சர்களும் சான்றுகளுடன் தோலுரித்த விரக்தியில் செய்தியாளர்களிடம் வண்டி வண்டியாக பொய்களை கொட்டியிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் புறக்கணித்தார்.
இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. 2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் புரட்சித் தமிழர்!