Minister Udayanidhi: 'தனக்கு இறை நம்பிக்கை கிடையாது’ - அமைச்சர் உதயநிதி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Udayanidhi: 'தனக்கு இறை நம்பிக்கை கிடையாது’ - அமைச்சர் உதயநிதி

Minister Udayanidhi: 'தனக்கு இறை நம்பிக்கை கிடையாது’ - அமைச்சர் உதயநிதி

Marimuthu M HT Tamil
Jan 24, 2024 04:18 PM IST

தனக்கு இறை நம்பிக்கை கிடையாது என்றும்; ஒரு உயிரை மற்றொருவர் காப்பாற்றினால் அவர் தான் கடவுள் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

’’தனக்கு இறை நம்பிக்கை கிடையாது. ஒரு உயிரை மாற்றொருவர் காப்பாற்றினால் அவரே கடவுள்’’- அமைச்சர் உதயநிதி
’’தனக்கு இறை நம்பிக்கை கிடையாது. ஒரு உயிரை மாற்றொருவர் காப்பாற்றினால் அவரே கடவுள்’’- அமைச்சர் உதயநிதி

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில், மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி பாராட்டும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் , சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’2015ஆம் ஆண்டு சென்னை செம்பரம்பாக்கம் ஏரி இரவோடு இரவாக திறந்து விட்ட சமயத்தில் நான் வசித்த சைதைப்பேட்டை பகுதியில் 2 அடுக்கிற்கும் மேலாக வெள்ள நீர் சூழ்ந்தது. 3 நாட்கள் மாடியில் தான் இருந்தோம். அப்போது ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர் தான் என்னையும் என் குடும்பத்தினரை மீட்டனர்’’ என்றார்.

தொடர்ந்து மீனவர்களைப் பாராட்டி பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ’’147 மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி வைத்துள்ளது. அதை மீட்க ஒன்றிய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை.  ராமேஸ்வரம் வரை சென்ற பிரதமர் மீனவர்களை ஏன் சந்திக்கவில்லை. அவர்களின் படகுகளை மீட்க ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’’ எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’மழை வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முன்வந்தவர்கள், மீனவர்கள். மீட்புப் பணிகளில் மீனவர்கள் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் களத்தில் நின்றோம். உதவி கேட்காமலே உதவி செய்ய முன்வருபவர்கள் மீனவர்கள், ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் மக்களை மீட்டவர்கள் மீனவர்கள்’’ எனப் பாராட்டினார்.

‘’நேர்மையும் துணிச்சலும் தான் மீனவ மக்களிடம் எனக்குப் பிடித்த விசயம். நம்பி வந்தவர்களை தோளோடு தோள் நின்று காப்பவர்கள் தான் மீனவர்கள் எனத் தெரிவித்த அமைச்சர் உதயநிதி, மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். 2017ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைத்தபோது போராடிய மாணவர்களுக்கு துணை நின்றவர்கள் மீனவர்கள்; ஜல்லிக்கட்டு உள்ளவரை மீனவர்கள் புகழ் நிலைத்து இருக்கும்'' எனவும் குறிப்பிட்டார்.

‘’மீனவர்களின் வாழ்வாதாரமான படகே உடைந்தாலும் பரவாயில்லை என மக்களைக் காப்பாற்றி இருக்கிறீர்கள், மழை வெள்ளப் பாதிப்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு தயார் செய்துவிடும். ஆனால், அதை மக்களிடம் சேர்த்தது மீனவர்கள், மழை வெள்ளப் பாதிப்பில் அரசுக்கு நற்பெயர் கிடைக்கக் காரணம் மீனவர்கள் தான்’’ என்றார்.

மீனவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசு திமுக என்று பல்வேறு மீனவர்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்திருப்பதாக சுட்டிக்காட்டி பேசிய அவர், ‘’எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஒரு உயிரை மற்றொருவர் காப்பாற்றினால் அவரே கடவுள். இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

பின்னர் மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதோடு, உணவு பந்தியில் மீனவர்களுக்கு உணவும் பரிமாறினார். இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.