Tamil News  /  Tamilnadu  /  Minister Senthil Balaji Explained About Ongoing It Raids In Karur, Chennai And Other Locations
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

Karur IT Raids: பரபரப்பை கிளப்பிய ஐடி ரெய்டு..'எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை' - அமைச்சர் செந்தில் பாலாஜி!

26 May 2023, 13:11 ISTKarthikeyan S
26 May 2023, 13:11 IST

Minister Senthil Balaji: ‘எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்சாரத் துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களிலும் அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையின் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கரூரில் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடைபெற்றபோது திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் எஸ்பி அலுவலகத்துக்கு விரைந்தனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடைபெறவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. அதைப்பற்றி நான் இப்போது பேசுவது சரியாக இருக்காது. வருமான வரிச்சோதனை தொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனக்கு நேரடியாக தொடர்புடையை எந்த இடத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. துறை ரீதியான கூட்டத்துக்கு சென்றுகொண்டிருக்கிறேன். சோதனை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன்." என்று தெரிவித்தார்.

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

டாபிக்ஸ்