Thiruparankundram: திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்.. எச்.ராஜா, அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர்பாபு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றத்தில் நேற்று ஒரு பெரிய கூட்டத்தைக்கூட்டி, மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்ற பிரச்னையை பிரிவினையை ஏற்படுத்த நினைத்தார்கள். வடமாநிலங்களில் வேண்டும் என்றால், அதற்கான சாத்தியக்கூறுகள் அமையக்கூடும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Thiruparankundram Issue: சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப்ரவரி 05) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மற்றும் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "தயவுசெய்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். முழுக்க முழுக்க அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்களைப் பொருத்தவரை பாஜக-வினர் தான் என்று நான் குற்றம்சாட்ட விரும்புகிறேன்.
தேவையற்ற ஒரு போராட்டம்
தமிழகத்தில் இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்று நடத்தப்பட்ட போராட்டம் என்பது தேவையற்ற ஒரு போராட்டம். பல்வேறு ஊடகங்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அந்த ஊடகங்கள், அப்பகுதியில் வசிக்கின்ற மக்களின் பேட்டிகளை எடுத்திருந்தனர். அதில் பேசிய இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினையும் இல்லை. தேவையின்றி, இந்த பகுதிக்கு வெளியூரில் இருந்து வருபவர்கள்தான், இப்பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். எனவே, இது தேவையற்ற பிரச்சினை என்று அப்பகுதி மக்களே கூறியிருக்கிறார்கள். எனவே, தான் நாங்களும் இது தேவையற்ற பிரச்னை என்று கருதுகிறோம்.
திருப்பரங்குன்றத்தில் நேற்று ஒரு பெரிய கூட்டத்தைக்கூட்டி, மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்ற பிரச்னையை பிரிவினையை ஏற்படுத்த நினைத்தார்கள். வடமாநிலங்களில் வேண்டும் என்றால், அதற்கான சாத்தியக்கூறுகள் அமையக்கூடும்.
"திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க அனுமதிக்க மாட்டோம்"
எச்.ராஜா, அண்ணாமலை போன்றோருக்கு சொல்லிக்கொள்கிறேன். முதல்வர் எங்களை அடக்கிவாசிக்க சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்கள் வட மாநிலத்தைப் போல தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழக முதல்வர் உறுதிமிக்கவர். இரும்பு மனிதர். எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். இந்த மண்ணில், பெரியார், திராவிட மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க ஒருகாலமும் அனுமதிக்கமாட்டார்.
திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மாமன், மச்சானாக சகோதரத்துவம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் கோயில் பிரச்னையை எடுத்தால் பாரதி ஜனதா கட்சிக்கு பூஜ்ஜிய வாக்கு சதவீதம் கூட கிடைக்காது. இதைவைத்து அரசியல் ஆக்க வேண்டாம். திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி அதில் குளிர் காய நினைக்கிறார்கள். அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் வடமாநிலம் போல இங்கே பிரச்னையை உருவாக்க நினைக்கிறார்கள்." என்றார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்