’துயரம் மக்களுக்கு இல்லை; எடப்பாடிக்குதான்!’ அமைச்சர் சேகர்பாபு கிண்டல்!
”துயரமே எடப்பாடிக்கு தான். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என்ற பயத்தில் அவர் இப்படி பேசுகிறார்”

திமுக ஆட்சியில் மக்கள் துயரமாக இல்லை, எடப்பாடி பழனிசாமிதான் துயரமாக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்து உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார். தமிழக மக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் துயரத்தில் இருப்பதாக எடப்பாடி தெரிவித்த கருத்துக்கு, “துயரமே அவருக்கு தான்” என்று சேகர் பாபு பதிலளித்தார்.
எடப்பாடியின் விமர்சனத்துக்கு பதிலடி
எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக மக்கள் திமுக ஆட்சியில் துயரத்தில் இருப்பதாகக் கூறியதற்கு, அமைச்சர் சேகர் பாபு, “மக்கள் துயரத்தில் இருந்தால், காலையில் எப்படி 7 மணிக்கு எழுந்து நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்? நாங்கள் எப்படி எழுந்து வந்திருப்போம்? துயரமே எடப்பாடிக்கு தான். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என்ற பயத்தில் அவர் இப்படி பேசுகிறார்,” என்று கிண்டலாக தெரிவித்தார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடியின் பேச்சில் மகிழ்ச்சியான அல்லது மங்களகரமான வார்த்தைகள் இல்லை என்றும், அவரது கருத்துகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.