தேசபக்தியில் தமிழர்கள் சளைத்தவர்களா? மன்னிப்பு கேளுங்க! ஆளுநரை விளாசும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
ஏதோ தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகை அவர்தான் என்பதுபோல அவர் பேசுகிறார். தேசபக்தியில் தமிழ்நாட்டு மக்களை விஞ்சி அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. தேசத்திற்காக தன்னுயிரை தமிழ்நாட்டில் இருந்து பலரும் அர்ப்பணித்து உள்ளார்கள்.
ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
திமுக அரசின் சாதனைகளை சொல்ல தயக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பது போல் உள்ளது. பாரம்பரியமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்ன நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்கிறதோ, அதே நிகழ்வுதான் தொடர்ந்து நடைபெறுகிறது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அவர் இறங்குகிறார். அது நடக்காது என்ற காரணத்தினாலும், ஆளுநர் உரையை வாசித்தால் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை வரிசையாக அடுக்க வேண்டி வரும் என்பதாலும், அரசின் சாதனையை மக்களிடையே கொண்டு சேர்க்க கூடாது என்ற காரணத்தால் இன்றைக்கு அவர் நடந்து கொண்டார்.
தேசபக்தியில் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல!
தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகளை படிப்பதற்கு தயங்கி கொண்டுதான். இன்றைக்கு இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார். கடந்த முறை தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரை சொல்லாமல் மறைத்தவர். ஒட்டுமொத்தமாக ஆளுநர் உரையை புறக்கணித்து சென்று உள்ளார்.
அதற்கு காரணமாக தேசிய கீதம் பாடவில்லை என்று சொல்கிறார். ஏதோ தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகை அவர்தான் என்பதுபோல அவர் பேசுகிறார். தேசபக்தியில் தமிழ்நாட்டு மக்களை விஞ்சி அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. தேசத்திற்காக தன்னுயிரை தமிழ்நாட்டில் இருந்து பலரும் அர்ப்பணித்து உள்ளார்கள்.
ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்!
இவருக்கு முன்பாக இருந்த ஆளுநர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தியாகி என்று அழைக்கப்பட்டார்கள். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் முதலமைச்சர்களாக இருந்து உள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த எண்ணம் கிடையாதா?, இவருக்கு முன்பாக அதிமுக ஆட்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடிய பிறகுதான் தேசிய கீதத்தை பின்னர் பாடுவது வழக்கம். தேசிய கீதத்திற்கு எந்த விதத்திலும் தமிழ்நாட்டு மக்கள் அவமரியாதை செய்வது கிடையாது.
தவறான வாதத்தை வைத்து, நாடகத்தை நடத்த முன் வந்த ஆளுநரை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களால் புறந்தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் நியமன ஆளுநர் என்பதை மறந்து, தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை விட தான் பெரியவர் என்ற சிந்தனையில் அவர் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். ’ஆளுநர் ரவியே வெளியேறு’ என்ற கோஷம் எழுப்பும் நிலையை அவர் ஏற்படுத்தி உள்ளார். அவர் அவையை அவமதித்தற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் தேச பக்தியில் குறைந்தவர்கள் கிடையாது. சீனப்போர் தொடங்கி கார்கில் போர் வரை திமுக தனிப்பட்ட முறையிலும், அரசின் சார்பிலும் மற்ற மாநிலங்களை விட அதிக நிதி வழங்கி உள்ளது என கூறினார்.