DMK: திமுக மீது வீண் பழி! முகமூடி கிழிந்து தொங்குகிறது! மன்னிப்பு கேட்பாரா எடப்பாடி பழனிசாமி? அமைச்சர் ரகுபதி சவால்!
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.

ஈசிஆர் சாலையில் திமுக கொடி கட்டிய காரில் உள்ள நபர்கள் பெண்களின் காரை வழிமறித்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது. திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா? என பதிவிட்டு உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக ’யார் அந்த சார்கள்?’ என ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். அதில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.
அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.
பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா?
பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா?
குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா?
#யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த திரு. ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?
மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
