Tamil News  /  Tamilnadu  /  Minister Ponmudy Said That Tamil Medium Courses Will Not Be Closed In Engineering Colleges
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி

Engineering In Tamil Medium: பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது- அமைச்சர் பொன்முடி

26 May 2023, 13:02 ISTPandeeswari Gurusamy
26 May 2023, 13:02 IST

K.Ponmudy: இது சம்பந்தமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கோ எனக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடப்பிரிவுகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் விழுப்புரம் அண்ணா உறுப்பு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்ள சென்ற பொழுது கல்லூரி முதல்வரும் செய்தியாளர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் இது சம்பந்தமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கோ எனக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது. 

உடனடியாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக நேற்று காலை அறிவித்திருந்தார். தமிழ் வழியில் படிக்க மாணவர்கள் இல்லை என்று அதை மூடுவது முக்கியமல்ல. தி.மு.க.ஆட்சிக்காலத்தில் தான் பொறியியல் படிப்பில் தமிழ் வழியில் பாடப் பிரிவுகள் கொண்டு வரவும் சட்டம் இயற்றப்பட்டது. நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார். தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.

ஒன்றும் அறியாத அண்ணாமலை ஏதோ அரசியல் காரணங்களுக்காக பேச வேண்டும் என்று அவர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அவருக்கு தமிழைப் பற்றியும் தெரியாது. தமிழரது வரலாறும் தெரியாது. கன்னடத்தில் இருந்து இங்கு வந்து அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரிந்துவிடப் போகிறது. அவர் நான் மழுப்பலாக பதில் அறிவித்திருந்தேன் என்று கூறிவருகிறார். நான் என்ன மழுப்பலாக அறிவித்து விட்டேன். அவர்கள் போல் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தை மக்களிடம் திணிப்பதற்கு முயல்கிறேனா. அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலை தொடர்ந்து இதுபோல் பேசி வருகிறார். 

இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கலைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்று சட்டமாக இயற்றி அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இது போன்ற பிரச்சனைகள் களையப்படும் மேலும் பொறியியல் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் ஒரு சில இடங்களில் நிதி பற்றாக்குறையால் அப்பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. படிப்படியாக கட்டமைப்பு உயர்த்தப்பட்டு மாணவரின் கல்வித் திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

டாபிக்ஸ்