Ponmudi Apologizes: ஆபாச பேச்சு எதிரொலி! பகிரங்க மன்னிப்பு கேட்டார் பொன்முடி! அதுல இந்த வார்த்தைதான் ஹைலைட்!
"மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்"

சைவம் மற்றும் வைணவ சமய குறியீடுகளை உடலுறவு கொள்வதுடன் ஒப்பீடு செய்து பேசிய பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு தெரிவித்து உள்ளார்.
பொன்முடியின் சர்ச்சை பேச்சு
தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி “தப்பா நினைச்சுக்காதீங்க மகளிர். ஒரு விலைமாது வீட்டுக்கு ஒருத்தன் போறான். போகும்போது அங்க அந்த அம்மா கேக்குது, ‘நீங்க சைவமா வைணவமா?’ அப்படின்னு கேக்குது. அவனுக்கு ஒன்னும் புரியல. அவன், ‘பணம் எவ்வளவு? அஞ்சு குடு, பத்து கொடு’ன்னு கேட்டான்னா, ‘ரைட், என்னடா இங்க வந்துருக்கறோம்? நாம ஒரு விலைமாது வீட்டுக்கு வந்து, சைவமா வைணவமான்னு கேக்குறாங்க’ அப்படின்னு கேட்டான். அந்த அம்மா சொல்லிச்சு, சைவம்னா படுத்துக்கிறது, வைணவம்னா நின்னுக்கிறது. நின்னா அஞ்சு, படுத்தா பத்து’ன்னு சொன்னா” என பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கனிமொழி கண்டனம்
இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திமுக துணை பொதுசெயலாளரும், எம்.பியுமான கனிமொழி பொன்முடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
கட்சி பதவி பறிப்பு
இந்த நிலையில் பொன்முடி வசம் இருந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு கொள்கை பரப்பு செயலாளராக இருந்த திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பொன்முடியின் பேச்சை கண்டித்து வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
மேலும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் பொன்முடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
”மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்”
இந்த நிலையில் தனது பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறி அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
