தொகுதி மறுவரையறை: ’இல்லாத பூதத்தை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி!’ விளாசும் எல்.முருகன்!
“தொகுதி மறுவரையறை எப்போது நடைபெறப் போகிறது, எந்த அடிப்படையில் நடைபெறப் போகிறது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாய தோற்றத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறார்”

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகீரத பிரயத்தனம் செய்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2027-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது முதலே, தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டிற்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க, பாஜக சதி செய்வதாக திரு.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி வருவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.