சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்..கதறும் உரிமையாளர் - அமைச்சர் சொன்ன விளக்கம் இதோ!
Salem Modern Theatre: சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளாா்.

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் 1935-ல் மாடர்ன் தியேட்டர் ஏற்படுத்தப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்கு மாடர்ன் தியேட்டர் திருப்புமுனையாக அமைந்தது. அதன் வளாகம் தற்போது குடியிருப்புகளாக மாறிய நிலையில், மாடர்ன் தியேட்டர் நினைவு வளைவு மட்டும் தற்போது உள்ளது.
இதனிடையே, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் வளைவை கேட்டு மாவட்ட ஆட்சியர் மிரட்டுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மாடர்ன் தியேட்டர் நில உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வரின் விருப்பம் எனக் கூறி வளைவு முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டார். நான் குடும்பத்தினரிடம் பேசி தெரிவிப்பதாக கூறி வந்தேன். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தொந்தரவுகளை கொடுக்கிறது.
கடந்த 1ஆம் தேதி ஏற்காடு பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி பிரச்னைக்குரிய பகுதியில் அளவீடு செய்வது போல், எங்களுக்கு சொந்தமான இடத்தில் கல் நட்டு பேனர் வைத்துள்ளனர். எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. நியாயமாக இந்த இடத்தில் மாடர்ன் தியேட்டர்ஸை உருவாக்கிய டி.ஆர்.சுந்தரம் சிலை தான் வைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
