Duraimurugan: ’ஸ்டாலினுக்கு வன்னியர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்’ அமைச்சர் துரைமுருகன்!
கலைஞரும், ஸ்டாலினும் ஆற்றி இருக்கும் தொண்டுக்கு, இந்த சமுதாயம் என்றைக்கும் சத்தியவானாக நியாயவானாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மனிதனாகவே இருக்க முடியாது. இதைவிட வேறு எவரும் செய்துவிட முடியாது.

விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கும் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இடஒதுகீட்டுக்காக தியாகம் செய்த 21 பேருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி தரப்பட்டு உள்ளது. அண்ணன் ஏ.கோவிந்தசாமி அவர்களை பற்றி இந்த மாவட்டத்தில் அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் ’ஏ.ஜி’ என்ற இரண்டு எழுத்துக்கு தனி மரியாதை உண்டு. அரசியலில் கரைபடாத கரம், மாசற்ற மனம், எவரிடத்திலும் மரியாதை காட்டுகின்ற பண்பு, கழக கொள்கையில் பற்று, அண்ணாவிடத்தில் பக்தி, கலைஞரிடத்தில் நம்பிக்கை, கழகத் தோழரிடத்தில் தோழமை, மக்களிடத்திலே பாசம் கொண்டிருந்தவர் ஏ.கோவிந்தசாமி அவர்கள்.
மக்களின் நன்மதிப்பு பெற்ற ஏ.ஜி
கலைஞரிடமும், கலைஞரின் குடும்பத்தினரிடமும் விசுவாசமாக இருக்க வேண்டும் என அவர் என்னிடம் வலியுறுத்தி உள்ளார். ஏ.ஜி அவர்கள் சமுதாயத்தை வைத்து பிழைக்கத் தெரியாதவர். பிறரை கெடுக்கத் தெரியாதவர். ஏழையாகவே பிறந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழை அமைச்சராகவே இறந்து போனவர். அதனால்தான் இன்றும் முகையூர், விக்ரவாண்டி பகுதிகளில் அவருக்குள்ள மரியாதையை நான் பார்த்திருக்கிறேன்.
வன்னியர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை!
சட்டநாதன் கமிஷன் மூலம் எம்பிசி என்று மாற்றப்பட்டதால் இன்று பலர் முன்னேறி உள்ளனர். ஏ.ஜி.அவர்கள் வீட்டிலேயே 2 அல்லது 3 பேர் வரை ஐஏஎஸ் அதிகாரிகளாக உள்ளனர். இன்றைக்கு ஏ.ஜி மகன் எந்த கட்சிக்கு போனாலும் ஏ.ஜி மகன்தான், அதை மாற்ற முடியாது அல்லவா. வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல; தென்மாவட்டங்களில் பல சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கும் கலைஞர் வழிவகுத்து உள்ளார். கலைஞரும், ஸ்டாலினும் ஆற்றி இருக்கும் தொண்டுக்கு, இந்த சமுதாயம் என்றைக்கும் சத்தியவானாக நியாயவானாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மனிதனாகவே இருக்க முடியாது. இதைவிட வேறு எவரும் செய்துவிட முடியாது.
