Tamil News  /  Tamilnadu  /  Millets Should Distributed Through Ration Shops
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

சர்வதேச சிறுதானிய ஆண்டில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்

19 March 2023, 14:05 ISTPriyadarshini R
19 March 2023, 14:05 IST

சிறு தானிய ஆண்டில் தமிழக அரசு கேழ்வரகை பொது விநியோகத் திட்டத்தில் விரைந்து வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சிறுதானியங்களின் மருத்துவ பலன்களுக்காகவும், புவிவெப்பமடைதலைத் தடுக்கவும், இந்தாண்டு 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக அரசும் சோதனை முறையில், கோதுமைக்குப் பதிலாக 2 கிலோ கேழ்வரகை பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் வழங்க திட்டமிட்டது. ஆனால் போதிய அளவு கேழ்வரகை அரசு கொள்முதல் செய்யாததால், திட்டம் தள்ளிப்போனது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கேழ்வரகை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கி பயனாளிகளுக்கு கொடுக்கும் அரசின் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கடந்த மாதத்தில் 221 டன் கேழ்வரகை மட்டும் வாங்கியுள்ளது. ஆனால், நீலகிரிக்கு 440 டன்னும், தர்மபுரிக்கு 920 டன் கேழ்வரகும் தேவைப்படுகிறது. 

அகில இந்திய அளவில் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக, தமிழகம் தான் அதிகளவில் கேழ்வரகை உற்பத்தி செய்து வருகிறது. ஏறக்குறைய 2.74 முதல் 3 லட்சம் டன் தமிழகத்தில் ஓராண்டில் உற்பத்தியாகிறது. இதில் 50 சதவீதத்திற்கு மேல் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தே அறுவடை செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் 1.5 லட்சம் டன், தர்மபுரியில் 30,303 டன், ஈரோடில் -18,318 டன், வேலூரில் 17,723 டன், சேலத்தில் 14,261 டன், கேழ்வரகு என தமிழகளவில் மொத்தம் 2.55 லட்சம் டன் கேழ்வரகு தமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கேழ்வரகு உற்பத்தியாளர்கள், அரசு நிர்ணயித்த விலையான கிலோ ரூ.35.78  முதல் தர கேழ்வரகுக்கு போதாது என்றும், வெளிச்சந்தையில் முதல் தர கேழ்வரகு கிலோ ரூ.45-50 என விற்கப்படுவதால், அரசு கொள்முதல் நிலையங்களில் விற்கத் தயங்குவதாகவும், அரசு விலை நிர்ணயம் செய்யும்போது விவசாயிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் வெளிச்சந்தையில் விற்கும்போது விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் கிடைத்துவிடுகிறது. எனவே இந்த பிரச்னைகள் அனைத்தையும் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.   

போதிய கேழ்வரகை கொள்முதல் செய்யாததால், தமிழக அரசின் உணவுத்துறை, மத்திய அரசின் உணவு கார்ப்பரேசன் நிறுவனம் (FCI) மூலம் மத்திய திட்டத்தின் கீழ் கேழ்வரகை வாங்குமாறு மத்திய அரசை அணுகியுள்ளது.

தமிழகத்தில் கேழ்வரகை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2 மாவட்டங்களில் (தர்மபுரி, நீலகிரி) அளிக்க இருப்பது இதுவே முதல்முறை.

தமிழக அரசு, மத்திய அரசின் உணவு கார்ப்பரேசன் நிறுவனத்தை, மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் கேழ்வரகை வாங்கித் தரச் சொல்லி வலியுறுத்தி வருகிறது. அது கிடைத்த பின் இத்திட்டத்தை சில மாதங்கள் ஆய்வு செய்து, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் ஊட்டச்சத்து நிறைந்த (100 கிராம் கேழ்வரகில் 344 மி.கி. கால்சியம், 3.9 மி.கி. இரும்புத்சத்தும் உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசிக்குப் பதிலாக, கம்பு, கேழ்வரகை அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொடுத்தாலே ரத்தசோகையை எளிதாக கட்டுப்படுத்த முடியும்)

கேழ்வரகை அருகிலுள்ள மாவட்டங்களில் விவசாயிகள் பயனுரும் வகையில் விலை நிர்ணயித்து வாங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மக்களின் சுகாதாரத்தை பேணிகாத்து, பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தியும், புவிவெப்பமடைதலைக் குறைக்கவும் உதவும் சிறுதானியங்களை (கேழ்வரகு) ஊக்குவிக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்த, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கேழ்வரகு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து சிறுதானிய ஆண்டில், அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க தக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று டாக்டர் புகழேந்தி அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். 

டாபிக்ஸ்