ஆவின் கிரீன் பால்.. கமிஷன் தொகையை உயர்த்துறதா சொன்னீங்க..வழங்காமல் ஏமாற்றுவது அழகல்ல: CM-ஐ விமர்சித்த பால் முகவர் சங்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆவின் கிரீன் பால்.. கமிஷன் தொகையை உயர்த்துறதா சொன்னீங்க..வழங்காமல் ஏமாற்றுவது அழகல்ல: Cm-ஐ விமர்சித்த பால் முகவர் சங்கம்

ஆவின் கிரீன் பால்.. கமிஷன் தொகையை உயர்த்துறதா சொன்னீங்க..வழங்காமல் ஏமாற்றுவது அழகல்ல: CM-ஐ விமர்சித்த பால் முகவர் சங்கம்

Marimuthu M HT Tamil
Dec 27, 2024 10:56 AM IST

ஆவின் கிரீன் பால்.. கமிஷன் தொகையை உயர்த்துறதா சொன்னீங்க..வழங்காமல் ஏமாற்றுவது அழகல்ல: CM-ஐ விமர்சித்த பால் முகவர் சங்கம் குறித்துப் பார்ப்போம்.

ஆவின் கிரீன் பால்.. கமிஷன் தொகையை உயர்த்துறதா சொன்னீங்க..வழங்காமல் ஏமாற்றுவது அழகல்ல: CM-ஐ விமர்சித்த பால் முகவர் சங்கம்
ஆவின் கிரீன் பால்.. கமிஷன் தொகையை உயர்த்துறதா சொன்னீங்க..வழங்காமல் ஏமாற்றுவது அழகல்ல: CM-ஐ விமர்சித்த பால் முகவர் சங்கம்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்க நிறுவனத்தலைவர் சு.ஆ. பொன்னுசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘ கடந்த டிசம்பர் 18ம் தேதி திருவள்ளூர்-காஞ்சிபுரம், சேலம், கோவை ஆகிய மூன்று ஒன்றியங்களில் ஆவினில் 4.5% கொழுப்பு சத்தும், 9% திடசத்தும் கொண்ட, வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட "கிரீன் மேஜிக் ப்ளஸ்" எனும் பெயரில் 450மிலி அளவு கொண்ட புதிய வகை நிலைப்படுத்தப்பட்ட பாலினை (Standardized Milk) அறிமுகம் செய்வதாக 12.12.2024 அன்று செய்திக் குறிப்பு (ந.க.எண்.384/GM/Mkg/2023) ஒன்றை ஆவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் திரு. சு.வினித் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தாமல் இருப்பது ஏமாற்று செயல்: பொன்னுசாமி

அவ்வாறு ஆவின் நிர்வாக இயக்குநர் அவர்களின் செய்திக் குறிப்பு அடிப்படையில் அறிமுகம் செய்த புதிய வகை நிலைப்படுத்தப்பட்ட (Standardized Milk) (கிரீன் மேஜிக் ப்ளஸ்) பாலின் விற்பனை விலையை லிட்டர் அளவில் கணக்கிடும் போது ஏற்கனவே விற்பனையில் உள்ள "கிரீன் மேஜிக்" பாலின் விற்பனை விலையை விட லிட்டருக்கு 11.00ரூபாய் கூடுதலாகும் என்பதால் பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தாமல் இவ்வாறு செய்வது பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றும் செயல் என அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையாக எதிர்த்தது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து பாமக, அமமுக, நாதக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவிக்க தொடங்கியதும் புதிய வகை பாலினை அறிமுகம் செய்வது தொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் திரு. சு.வினித் ஐஏஎஸ் அவர்கள் கடந்த 14.12.2024 அன்று அவசர, அவசரமாக செய்திக் குறிப்பு (செய்தி வெளியீடு 1099/14.12.2024) ஒன்றை வெளியிட்டார்.

அதில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, சில்லறை தட்டுப்பாடு என்கிற இரண்டு பொய்யான காரணத்தை அவர் கூறிய போதும் எதிர்வினையாற்றாத பால் முகவர்கள் பலரும் ஆவின் விற்பனைக்கான குளிர்சாதன வசதிக்கான செலவினங்களை கருத்தில் கொண்டு "கிரீன் மேஜிக் ப்ளஸ்" பால் பாக்கெட் விற்பனைக்கு கூடுதல் கமிஷன் தொகை வழங்க இருப்பதாக ஆவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் திரு சு.வினித் ஐஏஎஸ் அவர்கள் மூன்றாவதாக கூறிய விசயத்தை பார்த்து உள்ளபடியே பால் முகவர்கள் அனைவரும் ஓரளவிற்கு சந்தோஷப்பட்டனர்.

ஏனெனில் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை 2004ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை லிட்டருக்கு 1ரூபாய் 50காசுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லிட்டருக்கு வெறும் 50காசுகள் மட்டும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது.

பால்முகவர்களுக்கு கடுமையான செலவினம்: பொன்னுசாமி

அதன் பிறகான கடந்த ஐந்தாண்டுகளில் ஆவின் பால் விநியோகம், விற்பனைக்கு வாகன எரிபொருள், கடை வாடகை, மின்கட்டணம், ஊழியர்கள் சம்பளம் என பால் முகவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான செலவின உயர்வினை கவனத்தில் கொண்டு உயர்த்தப்படாமல் தற்போது வரை லிட்டருக்கு வெறும் 2.00ரூபாய் மட்டுமே ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் அந்த 2.00ரூபாயை மொத்த விநியோகஸ்தர்கள், பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என மூன்று தரப்பினர் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் தான் ஆவின் பால் பாக்கெட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விட லிட்டருக்கு இரண்டு ரூபாய் முதல் நான்கு ரூபாய் வரை சில்லரை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் மொத்த விநியோகஸ்தர்களுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகத்திற்கு என வாகன வாடகையாக லிட்டருக்கு 70காசுகள் (Transport Subsidy) தனியாக கொடுப்பதோடு ஒழுகும் பால் பாக்கெட்டுகளுக்கு என (Average Leakage Allowance) சராசரி இழப்பீடும் ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து வழங்கினாலும் அதில் சிறிதளவு கூட பால் முகவர்களுக்கு வழங்காமல் மொத்த விநியோகஸ்தர்களே மொத்தமாக எடுத்து கொள்வதால் ஆவின் பால் விநியோகம் செய்யும் பால் முகவர்கள் பெரும் நிதியிழப்பை சந்தித்து வருகின்றனர்.

மேலும் கடந்த 2022ம் ஆண்டு நிறை கொழுப்பு பாலான (Full Gream Milk) ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விற்பனை விலை லிட்டருக்கு 12.00ரூபாய் உயர்த்தப்பட்ட போதும் கூட அதற்கான விற்பனை கமிஷன் தொகையும் உயர்த்தி வழங்கப்படாத சூழலில் பால் முகவர்களுக்கான செலவினங்களை கணக்கில் கொண்டு தற்போது மூன்று ஒன்றியங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள "கிரீன் மேஜிக் ப்ளஸ்" பால் பாக்கெட் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கப்படும் என நிர்வாக இயக்குநர் வினித் ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்ததை நம்பிய பால் முகவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு, மகிழ்ச்சி அடைந்தனர்.

நட்டாற்றில் விட்டு விட்டது ஆவின் நிர்வாகம்: பொன்னுசாமி

ஆனால் பால் முகவர்களின் அந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை காரணம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லிட்டருக்கு 11.00ரூபாய் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டின் விற்பனை விலை உயர்த்தப்பட்ட நிலையில் திருவள்ளூர் - காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள பால் முகவர்களுக்கு மட்டும் "கிரீன் மேஜிக் ப்ளஸ்" பால் பாக்கெட் விற்பனைக்கான கமிஷன் தொகையை லிட்டருக்கு 1ரூபாய் 10காசுகள் உயர்த்தி வழங்கி விட்டு சேலம், கோவை ஒன்றியங்களில் உள்ள பால் முகவர்களை அம்போவென நட்டாற்றில் விட்டு விட்டது ஆவின் நிர்வாகம். குறிப்பாக சேலம், கோவை ஒன்றியங்களில் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்காமல் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விற்பனை கமிஷன் தொகையையே (சேலம் 5%, கோவை 4.1%) "கிரீன் மேஜிக் ப்ளஸ்" பால் பாக்கெட் விற்பனைக்கும் வழங்கி வருவதும், அதனை கேள்வி எழுப்பும் பால் முகவர்களை ஆவின் நிர்வாகம் தொடர்ந்து மிரட்டி வருவதும் "ஒரு கண்ணில் சுண்ணாம்பு மற்றொரு கண்ணில் வெண்ணெய்" என்பதை போல அமைந்துள்ளது. ஆவின் பால் என்பது ஒரே வணிக பெயராக இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் ஒரே நிலைப்பாடு இல்லாமல் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாறுபாடான நிலைப்பாடு கொண்டு பால் முகவர்களை நம்ப வைத்து ஏமாற்றுவது போல் செயல்படுவது என்பது ஏற்புடையதல்ல.

எனவே திருவள்ளூர்-காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள பால் முகவர்களுக்கு கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் பாக்கெட் விற்பனைக்கான கமிஷன் தொகையை லிட்டருக்கு 1ரூபாய் 10காசுகள் உயர்த்தி வழங்குவது போல் சேலம், கோவை ஒன்றியங்களில் உள்ள பால் முகவர்களுக்கும் உயர்த்தி வழங்கிட சம்பந்தப்பட்ட சேலம், கோவை மாவட்ட ஒன்றிய பொதுமேலாளர்களுக்கும், ஆவின் நிர்வாக இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும் எனவும், கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் பாக்கெட் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குவது போல் அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான அளவில், ஒரே அளவாக ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கான விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிட அரசு உரிய கொள்கை ரீதியாக முடிவெடுத்து பால் முகவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

புதிய வகை பாலின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து அதனை செயல்படுத்த தவறி விட்டார்: பொன்னுசாமி

அத்துடன் வர்த்தக நிறுவனங்களாக செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களும் புதிய வகை பால், பால் பொருட்களை அறிமுகம் செய்யும் போது பால் முகவர்களுக்கும், நுகர்வோருக்கும் பல்வேறு சலுகைகளை (Scheme) வழங்கி புதிய வகை பால், பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் ஆவின் வர்த்தக நிறுவனம் என கூறும் நிர்வாக இயக்குநர் வினித் ஐஏஎஸ் அவர்கள் ஆவினில் டிலைட் பால் அறிமுகம் செய்த போதும் சரி, தற்போது கிரீன் மேஜிக் ப்ளஸ் அறிமுகம் செய்த போதும் சரி பால் முகவர்களுக்கோ, நுகர்வோருக்கோ எந்தவிதமான சலுகைகளையும் அறிவித்து புதிய வகை பாலின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து அதனை செயல்படுத்த தவறி விட்டார் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்’’ எனத் தெரிவித்திருக்கிறார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.