'அடிக்கடி பால் விற்பனை விலை உயர்வு.. வாங்காத மக்கள்.. மற்ற நிறுவனங்களும் பால் விலையை குறைங்க’ - பால் முகவர்கள் சங்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'அடிக்கடி பால் விற்பனை விலை உயர்வு.. வாங்காத மக்கள்.. மற்ற நிறுவனங்களும் பால் விலையை குறைங்க’ - பால் முகவர்கள் சங்கம்

'அடிக்கடி பால் விற்பனை விலை உயர்வு.. வாங்காத மக்கள்.. மற்ற நிறுவனங்களும் பால் விலையை குறைங்க’ - பால் முகவர்கள் சங்கம்

Marimuthu M HT Tamil Published Apr 24, 2025 11:01 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 24, 2025 11:01 AM IST

'அடிக்கடி பால் விற்பனை விலை உயர்வினால், அதை வாங்காத மக்கள் குறித்தும் அதனால் ஒரு தனியார் நிறுவனம் பால் விலையைக் குறைத்தது பற்றியும், அதனால் மற்ற நிறுவனங்களும் பால் விலையை குறைக்க வேண்டும் என்பது பற்றியும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

'அடிக்கடி பால் விற்பனை விலை உயர்வு.. வாங்காத மக்கள்.. மற்ற நிறுவனங்களும் பால் விலையை குறைங்க’ - பால் முகவர்கள் சங்கம்
'அடிக்கடி பால் விற்பனை விலை உயர்வு.. வாங்காத மக்கள்.. மற்ற நிறுவனங்களும் பால் விலையை குறைங்க’ - பால் முகவர்கள் சங்கம்

இதுதொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறுகையில், ‘’தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் கடந்த மார்ச் 14ம் தேதி ஆரோக்யா பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00 ரூபாயும் தன்னிச்சையாக உயர்த்திய நிலையில் அந்நிறுவனத்தை பின்பற்றி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விற்பனை விலை உயர்வை உடனடியாக அமுல்படுத்தின. இருப்பினும் அந்நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் மட்டுமே உயர்த்தின.

ஏற்கனவே கடந்தாண்டு (2024) டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும், நடப்பாண்டின் (2025) பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்திய அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அடுத்த ஒரு மாத இடைவெளியில் (மார்ச் மாதம் 14ம் தேதி முதல்) மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தியதால் பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி சில்லறை வணிகர்கள், தேனீர் கடை, உணவகங்கள், இனிப்பகங்களின் உரிமையாளர்கள், கேன்டீன் நடத்துவோர் என பலதரப்பட்டோர் மத்தியிலும் வெறுப்பை சந்திக்க நேரிட்டது. இதன் காரணமாக விற்பனை விலையை உயர்த்திய முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனை சரிவடையத் தொடங்கிய நிலையில் வரலாறு காணாத வகையில் விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனத்தின் பால் விற்பனையும் கடும் சரிவை சந்திக்கத் தொடங்கியது.

விலையைக் குறைத்த ஹட்சன் நிறுவனம்:

இதனால் விழித்துக் கொண்ட ஹட்சன் நிறுவனம் பால் முகவர்களுக்கும், சில்லறை வணிகர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கியும் பால் விற்பனை உயராத காரணத்தால் தங்களது நிறுவனத்தின் பால் விற்பனையை தக்க வைத்துக் கொள்ளவும், குறைந்த பால் விற்பனை அளவை உயர்த்திடும் நோக்கத்திலும் அதிகளவில் விற்பனையாகும் வணிக பயன்பாட்டிற்கான நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 4.00 ரூபாய் குறைக்க முடிவு செய்து முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி லிட்டருக்கு 2.00 ரூபாயும், இன்று (24.04.2025) முதல் லிட்டருக்கு 2.00 ரூபாயும் என லிட்டருக்கு 4.00 ரூபாய் விற்பனை விலை குறைப்பை அந்நிறுவனம் தற்போது அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஆரோக்யா 500மிலி நிறைகொழுப்பு பால் பாக்கெட் 40.00 ரூபாயில் இருந்து 38.00 ரூபாயாகவும், 1 லிட்டர் நிறைகொழுப்பு பால் பாக்கெட் 75.0 0ரூபாயில் இருந்து 71.00 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட (Standardized Milk) மற்றும் தயிர் விற்பனை விலையை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலின் விலையை எவ்வளவு உயர்த்தினாலும் பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே வாங்கிக் கொண்டிருப்பார்கள் என எண்ணியிருந்த தனியார் பால் நிறுவனங்களுக்கு தற்போது பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் பதிலடி கொடுக்க தொடங்கியிருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.

’’வாங்கும் திறனறிந்து தனியார் பால் நிறுவனங்கள் செயல்படுவதற்கான படிப்பினை'’:

ஏனெனில் பால் கொள்முதல் விலை உயர்வு இல்லாத காலகட்டத்தில் கூட பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் கூறி தொடர்ந்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களுக்குமான பால் வணிகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெருத்த அடி என்பது இனிமேலாவது மக்களின் வாங்கும் திறனறிந்து தனியார் பால் நிறுவனங்கள் செயல்படுவதற்கான படிப்பினையாகும் என்றால் அது மிகையாகாது.

மேலும் கடந்த மார்ச் மாதத்தில் பால் (நிறைகொழுப்பு மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால்), தயிர் விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனம் தற்போது பால் விற்பனை விலையை மட்டும் குறைக்க முன் வந்திருப்பது, குறிப்பாக நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) விற்பனை விலையை மட்டும் குறைக்க முன் வந்திருப்பது ஏற்புடையதல்ல.

’’பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்'’

எனவே, நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டுமின்றி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் தயிர் விற்பனை விலையையும் குறைக்க ஹட்சன் நிறுவனம் முன் வர வேண்டும், அதுமட்டுமின்றி புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல ஹட்சன் நிறுவனத்தை பின்பற்றி கடந்த மார்ச் மாதம் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அதன் விற்பனை விலையை உடனடியாக குறைக்க முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

அவ்வாறு பால், தயிர் விற்பனை விலையை குறைக்க முன் வராத தனியார் பால் நிறுவனங்களுக்கு பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அனைத்து தனியார் பால் நிறுவனங்களுளையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது'' எனத் தெரிவித்தார்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.