Cock Fight: நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு இரு மாவட்டங்களுக்கு அனுமதி
பொங்கல் விழாவை முன்னிட்டு ஈரோடு, திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 15, 18 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் பெரியவடமலைபாளையம், திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, சேவல்கள் துன்புறுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தால் அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சேவல் சண்டயின்போது சூதாட்டம் நடைபெற கூடாது, சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது, அவற்றை துன்புறுத்த கூடாது.
சேவல்களின் கால்களில் கத்தி போன்ற கூறிய ஆயுதங்கள் கட்டக்கூடாது. சேவல் சண்டை நடைபெறும் இடத்தில் காவலர் ஒருவரும், கால்நடை மருத்துவர் ஒருவரும் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பெருமைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
சேவல் சண்டை நடைபெறும் மாவட்டங்களில் புகழ் பெற்றதாக கருதப்படும் கரூர் மாவட்டம் பூலான்வலசில் இந்த ஆண்டில் சேவல் சண்டை நடத்த நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வழக்கம்போல் இங்கு சேவல் சண்டை நடைபெறும் என்ற தகவலை கேள்விப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.