தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Directs Edappadi Palanisamy To Appear On Court In Kodanad Case

Kodanad Case: இரண்டு நாள்கள் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 05, 2024 04:55 PM IST

கோடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்கள் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக உத்தரவு
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை தொடர்புபடுத்தி விடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2019இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் இபிஎஸ் சுட்டிக்காட்டி இருந்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு தடை விதிக்க கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு, இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, அதனை அறிக்கையாக ஜனவரி 12ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கடந்த 2017ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜூம் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே தனபால், இந்த வழக்கு தொடர்பாக தனபால் அளித்த பேட்டி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில், 'முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான், என் தம்பி இதைச் செய்தார்' இதனால் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்