MGR : ‘என்ன செய்தார் எம்.ஜி.ஆர்?’ தான் செய்ததை சொல்லாமல் சென்றவரே எம்.ஜி.ஆர்.. தன் புகழ்பாடாத ஒரே தலைவர்!
தன் சொத்துக்களை, தன் மறைவுக்குப் பின், காது கேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதி வைத்தார். முதல்வராக இந்த போது சம்பளப் படி, பெட்ரோல் செலவு, வீட்டு வாடகைப் படி, மருத்துவ செலவு எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.
‘எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?’ என்று, இன்றும் வலைதளங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கட்சி தொடங்கி, ஆட்சியை பிடித்த பின், தான் இறக்கும் வரை முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர்., எதுவுமே செய்யாமலேயா மக்கள் ஆதரித்திருப்பார்கள். தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சியினரிடம் இல்லாத ஒரு சிறப்பு, எம்.ஜி.ஆர்.,க்கு உண்டு. மற்றவர்கள் தான் செய்ததை, அனைவரும் அறியும் படி பார்த்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர்., அதை அந்த இடத்தில் இருந்தில் அணுகவில்லை.
தமிழ்நாட்டின் அடித்தளம் எம்.ஜி.ஆர்.,
80க்கு முந்தைய காலகட்டம் என்பது, அடிப்படை வசதிகளுக்கே நாம் திக்குமுக்காடிக் கொண்டிருந்த சமயம். இன்று நாம் பல வீடியோக்களை பார்க்கிறோம், ‘இப்படி இருந்த சென்னையா இது’ என. தலைநகர் சென்னையே கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருந்தது. வளர்ச்சி நெருங்க, அடிப்படை கட்டமைப்பு அவசியம். அதை தான் எம்.ஜி.ஆர்., செய்தார். கண் முன்னே கம்பீரமாக தெரியும் வீட்டை பார்க்கிறோம், ஆனால் அதை தாங்குவதற்கும், பாதுகாப்பதற்கும், பூமிக்குள் புதைந்திருக்கும், அடித்தளத்தைப் யாரும் கண்டுகொள்வதில்லை.
அது போல தான் எம்.ஜி.ஆர்.,யின் ஆட்சியும். எம்.ஜி.ஆர்.,யின் பிரதானம், ஏழைகளின் முன்னேற்றமாக தான் இருந்தது. பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்குவதை விட, ஏழையை மேலே உயர்த்துவது தானே உண்மையான சமூக நீதி. அதை தான், அன்று செய்தார் எம்.ஜி.ஆர். அதனால் தான், எம்.ஜி.ஆர்., என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு, ‘ஏழைக்கு செய்தார்’ என்று அவரது ஆதரவாளர்கள் இன்றும் பதிலளிக்கின்றனர்.
கோபுரத்திற்கு பதில் குடிசைகள் பக்கம் நின்றார்
உண்மை தான், உண்மையில் எம்.ஜி.ஆர்., ஒரு ஏழைப்பங்காளன். உச்ச நடிகராக இருந்தாலும், உழைப்பவரிடம், பாட்டாளிகளிடம் நெருங்கி பழகியவர். தன் பேரையும், புகழையும் பொருட்படுத்தாமல் மக்களுடன் இருந்தவர். அதனால் தான், அவருக்கு அவர்களின் சிரமங்கள், தேவைகள் தெரிந்தது. மேடை, கோபுரங்களில் இல்லை தன்னுடைய ஆட்சி; குடிசை, தெருக்களில் தான் இருக்கிறது என்பதை நம்பினார் எம்.ஜி.ஆர்.
அதனால் தான், அவர் கொண்டாடப்பட்டார். அது, வெறுமனே நடிகருக்கு கிடைத்த கொண்டாட்டம் அல்ல. நடிக்காத ஒரு அரசியல்வாதியின் நடத்தைக்கு கிடைத்த கொண்டாட்டம். தமிழக அரசியல் வரலாற்றை, எம்.ஜி.ஆர்., என்கிற ஏழை பங்காளன் இல்லாமல், எழுதவே முடியாது. அடித்தட்டு மக்களின் நம்பிக்கை நாயகனாக, தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை வாழ்ந்து சென்ற எம்.ஜி.ஆர்.,யை, பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.
சரி, இப்போது விசயத்திற்கு வருவோம், என்ன செய்தார் எம்.ஜி.ஆர்? இதோ அவர் செய்தவற்றில், சில:
- பகுதி நேர ரேஷன் கடைகளால் எழுந்த புகாரைத் தொடர்ந்து அரசு சார்பில் 22 ஆயிரம் முழு நேர ரேஷன் கடைகளை திறந்தார்
- சாலை, குடிநீர், சிறுபாலங்கள், ஊரக மருந்தகங்கள், தாய் சேய் நல விடுதிகள், மாயான பாதை என கிராமங்களை முன்னேற்றம் பல திட்டங்களுக்கு முன்னுரிமை
- தெலுங்கு-கங்கை திட்டத்தை உருவாக்கி, ஆந்திராவின் கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார்
- அத்தியாவசிய குடிநீர் பிரச்னைகளை போக்க, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், செயற்கை மழைத் திட்டம், சிறுவாணி குடிநீர் திட்டம், சாயர்புரம் குடிநீர் திட்டம் கொண்டு வந்தார்.
- உலகின் புரட்சியை ஏற்படுத்திய சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்
- அரசிடம் நிதியில்லாமல் இருந்ததால், அனைவருக்கும் பொறியியல் படிப்பு கிடைக்க வேண்டும் என்கிற எதிர்கால திட்டத்தில், தனியார் பொறியியல் கல்லூரிகள் நடத்த அனுமதி அளித்தார்.
- படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கினார்.
- தமிழ் சீர்திருத்த எழுத்தை அறிமுகம் செய்த பெருமை எம்.ஜி.ஆர்.,க்கு உண்டு
- தமிழ்நாட்டு 7 பல்கலை கழங்கள், எம்.ஜி.ஆர்., ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது
- கல்வி வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தார்
- பரம்பரையாக இருந்த மணியக்காரர் என்கிற பதவியை சட்டம் போட்டு ஒழித்து, கிராம நிர்வாக அதிகாரியை நியமனம் செய்தார்
- கடுமையான தண்டனைகளுடன் தமிழகத்தில் தீவிர மதுவிலக்கை அமல்படுத்தினார்
இதெல்லாம் எம்.ஜி.ஆர்., செய்தவற்றில், சில மட்டுமே. ஆனால், தான் செய்த எதையுமே அவர் விளம்பரப்படுத்தவோ, எதிர்காலம் அதை அறியும் படி ஆவணம் செய்யவோ இல்லை. போகிறப் போக்கில், அனைத்தையும் முடித்துச் சென்ற மக்கள் நாயகனாகவே அவர் மறைந்தார்.
யாருக்கும் இல்லாத தனித்துவமான சிறப்பு
எம்.ஜி.ஆர்.,யின் மற்றொரு சிறப்பு, இதுவரை எந்த முதல்வரும் தமிழ்நாட்டில் கடைபிடிக்காதது. அது, முதல்வரான பின்,
- எம்.ஜி.ஆர்., தனக்கென் எந்த சொத்தும் அவர் வாங்கவில்லை
- முதல்வராக இந்த போது சம்பளப் படி, பெட்ரோல் செலவு, வீட்டு வாடகைப் படி, மருத்துவ செலவு எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.
- தன் சொத்துக்களை, தன் மறைவுக்குப் பின், காது கேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதி வைத்தார்
இந்த மூன்று விசயம் போதாதா, எம்.ஜி.ஆர்., என்கிற மாமனிதனின் நற்குணங்களை அறிய. இன்றும் மறையாமல், ஒருவர் வாழ்கிறார், அவருக்கு எந்த குடும்பமும் இல்லை, தமிழ்நாடே குடும்பமாக அவரை போற்றுகிறது என்றால் அது, எத்தனை பெரிய பாடு. ‘அவர் என்ன செய்தார்?’ தான் செய்த எதையுமே, அவர் தெரியபடுத்த விரும்பவில்லை, துரிதப்படுத்தவே விரும்பினார். மக்கள் முதல்வராக வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,யின் நினைவு நாளில், அவரைப் போற்றுவோம்.