நிலக்கரி தட்டுப்பாடு - மின் உற்பத்தியை நிறுத்தியது மேட்டூர் அனல் மின் நிலையம்
சேலம்: நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. அதன் மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் 2- வது யூனிட்டில் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அலகும் இயங்கி வருகிறது. இவ்விரு யூனிட்டுகள் மூலம் தினசரி மொத்தமாக 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தை பொறுத்த வரை முதல் பிரிவில் 840 மெகாவாட் மின் உற்பத்திக்கு தினசரி 12 முதல் 14 டன் நிலக்கரியும், புதிய உற்பத்தி பிரிவில் இயங்கி வரும் 2- வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு 8 முதல் 9 டன் வரை நிலக்கரி தேவைப்படும் .
தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூரில் உள்ள பழைய அனல் மின் நிலையத்தில் 2 மற்றும் மூன்றாவது அலகுகளில் மின்சாரம் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. 1 மற்றும் 4ஆவது யூனிட்டுகளில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதேபோல் 2- வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் இருந்தும் சுமார் 340 மெகாவாட் மட்டுமே தற்போது மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இரு பிரிவிலும் தற்போது சுமார் 600 மெகாவாட் மட்டுமே மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது உள்ள நிலக்கரி கையிருப்பை கொண்டு இரண்டு நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படும் சூழல் உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு சீரடைந்ததும் முழு வீச்சில் மின் உற்பத்தி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை மாநிலங்களுக்கு விரைவாக கொண்டு செல்லும் விதமாக பல பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு நிலக்கரி ஏற்றி வரும் ரயில்களுக்கு வழிவிடப்பட்டு வருகிறது.