20வது ஆண்டு சுனாமி நினைவு தினம் முதல் அமித்ஷா தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு வரை.. இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!
Tamil Top 10 News: சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு, வானிலை தொடர்பான அறிவிப்பு, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை டாப் 10 தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், வானிலை முன்னெறிவிப்பு, க்ரைம் உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
சுனாமி நினைவு தினம் இன்று
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ராஜினாமா
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் விலகினார். அல்ட்ராடெக் சிமெண்ட்ஸின் துணை நிறுவனமாக இந்தியா சிமெண்ட்ஸ் மாறிய நிலையில் ராஜினாமா முடிவு செய்துள்ளார்.
சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்
வார இறுதி நாட்களையொட்டி 586 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் டிச.27, 28 தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரகசிய கேமரா விவகாரம்
ராமேஸ்வரத்தில் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில் ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றி வணிக நோக்கில் செயல்பட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடூர விபத்து - 3 பேர் பலி
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்த கார் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் கணபதி, பாலா(10), (ஹேமா 13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஜெயா, சரண்யா, தியா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி வன்கொடுமை - அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக இன்று அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
சுனாமி நினைவு தினம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
சுனாமி கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியபுரம், வாவுத்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. குமரி கடற்கரை கிராமங்களை சுனாமி தாக்கி 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்ததன் 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா வருகை திடீர் ஒத்திவைப்பு
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவின் தமிழக வருகை திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர், நாளை தமிழகம் வருகிறார் என்றும் டிசம்பர் 28 ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் பாஜக மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைப்பார்; பின்னர் திருவண்ணாமலை கோவிலில் வழிபாடு செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.