Melma SIPCOT Protest: ’மேல்மா சிப்காட் விவகாரம்! நேரடியாக போராட்ட தயங்கமாட்டேன்!’ அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!
Melma SIPCOT Protest: மேல்மா பகுதியில் உள்ள விளைநிலங்கள் வளம் மிக்கவை. அவற்றை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று உழவர்கள் கூறி விட்ட நிலையில், அந்தத் திட்டத்தை கைவிடுவது தான் அரசுக்கு அழகு. அதற்கு மாறாக உழவர்களை கைது செய்வது, தாக்குவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபடக்கூடாது.

மேல்மா பகுதி உழவர்களின் நிலங்களைக் காப்பதற்காகவும் நான் நேரடியாக களமிறங்கி போராடத் தயங்க மாட்டேன் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
விளை நிலங்களை பறிக்க முயல்வதா?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் உழவர்களை திமுக நிர்வாகிகளைக் கொண்டு தாக்குவது, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிராக மதிக்கும் நிலங்களை தர மறுக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
செய்யாறு சிப்காட் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 2700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதைக் கண்டித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 597&ஆம் நாளாக இன்றும் மேல்மா கூட்டுச் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என்று கூறி வரும் தமிழக அரசு, அங்கு போராடி வரும் உழவர்கள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியது, பொய்வழக்குகளை பதிவு செய்தது என எண்ணற்ற அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. ஆனால், உழவர்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கும் நிலையில், சில காலம் பின்வாங்கி அமைதியாக இருந்த ஆட்சியாளர்கள் இப்போது உழவர்களை அச்சுறுத்தி நிலங்களைப் பறிப்பதற்கான முயற்சிகளில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர்.
