மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.. வைகோ அறிக்கை
முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது. மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முருகன் மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று, திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தியும் காணொளி காட்சிகளை வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது. மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகள் எப்போதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பாஜக தனது அரசியல் சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு சதியில் ஈடுபட்டுள்ளது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பேசப்பட்ட கருத்துகள் மூலம் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.
இது முதல் முறையல்ல
தமிழ்நாட்டில் முருகனை முன் வைத்து பாஜக, அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பாஜக 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் முருகனை போற்றி பாடும் கந்த சஷ்டிக் கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும், பாஜகவும் போராட்டம் நடத்தின. அதன் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பாஜகவின் அப்போதைய மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.