International Women's Day: மகளிர் தின கொண்டாட்டம் காரணம்.. தேவை.. கட்டாயம்.. ஏன்?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  International Women's Day: மகளிர் தின கொண்டாட்டம் காரணம்.. தேவை.. கட்டாயம்.. ஏன்?

International Women's Day: மகளிர் தின கொண்டாட்டம் காரணம்.. தேவை.. கட்டாயம்.. ஏன்?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 08, 2024 06:00 AM IST

இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதற்கு பின்னால் இருக்கும் போராட்ட வரலாறு குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.

சர்வதேச மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம்

பெண்கள் மட்டும் ஸ்பெஷல் அவர்களுக்கு என தனியாக ஒரு தினம் கொண்டாடப்படுகிறது. ஏதோ ஒரு காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்ததால் மகளிர் தினம் அவசியமாக இருந்தது. இன்றுதான் அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் வைத்து விட்டனரே பிறகு என்ன என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதுகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை. இன்றும் வீடு, முதல் நாடு வரை பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

தாய் வழி சமூகம் மெல்ல மெல்ல மறையத் துவங்கிய காலம் தொட்டு பெண் என்பவள் இன்றும் இங்கு ஆண்களுக்கு ஒரு படி கீழ் என்பதையே இந்த சமூகம் கற்றுக் கொடுத்துள்ளது.

வீடுகளை பொறுத்தமட்டில் இன்றளவும் ஆண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பெண் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தொடங்கி அனைத்து வயதிலும் ஏதோ ஒரு வகையில் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. சில தினங்களுக்கு முன் மனைவியை கணவன் வீட்டு வேலைகளை செய்ய சொல்வது கொடுமை அல்ல என்று தில்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இங்கு பெண்கள் வீட்டு வேலை செய்வது தவறு என்று யாரும் வாதிடவில்லை. அதே சமையம் அதை கணவன் சொல்வது கொடுமை அல்ல என்று சொல்வதே பேசு பொருள். இப்படியான ஆண்களின் மனோபாவமே இன்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, அடக்கு முறைகளுக்கு முதல்கட்ட காரணமாக அமைகிறது. இன்று மகளிர் தினத்தை கொண்டாடும் நாளில் கூட புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பந்த் நடை பெறுகிறது என்பதே இன்றும் மகளிர் தினத்தை முன்னெடுப்பதற்கான அவசியம் உள்ளது என்பதை காட்டுகிறது.

மகளிர் தின கொண்டாட்ட வரலாறு

மகளிர் தினம் என்பது பொதுவான கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது உழைக்கும் பெண்களுக்கான தினம், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களும் தங்களுடைய உரிமைகளுக்காக ஒன்று திரள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தினம். 1850-களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கால்பாதிக்க தொடங்கினர்.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் சம்பளத்தில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. அது வேலை செய்யும் பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் மாநாட்டை நடத்தினர். அதில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின். அந்த மாநாடு பெண்களுக்கு சம உரிமை, ஊதிய உயர்வு, நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது. இதன் காரணமாக கிளாரா ஜெட்கின் புகழானது உலகெங்கிலும் பரவ தொடங்கியது.

பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கிளாரா, பெண்களின் உரிமைகளை உலகம் முழுவதும் நிலைநாட்டும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கருதினார். இதனை தொடர்ந்து மகளிர் தினம் முதன்முறையாக 1911, மார்ச் 19-ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஆனால் 1913-ம் வருடம் மார்ச் 8ம் தேதி பெண்களுக்கான வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தினத்தை நினைவுபடுத்தும் வகையில் மார்ச் 8-ம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் சமூகத்தின் சரி பாதியான பெண்களை அடுத்த கட்டத்திற்கு கைதூக்கி விடுங்க என கேட்கவில்லை. இந்த நாளில் சமூகத்தின் சரி பாதியான பெண்களை அடுத்த கட்டத்திற்கு கைதூக்கி விடுங்க என கேட்கவில்லை. முன் திசை நோக்கி முன்னேற தோழமையோடு கரம் பற்றுங்கள் என்பதே ஒட்டு மொத்த பெண் இனத்தின் எதிர்பார்ப்பு.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.