வாட்டும் வெயில்.. ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
Hogenakkal Falls: வார விடுமுறையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.
கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ள நிலையில், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒக்கேனக்கல் அருவி முக்கியமான ஒன்று. இந்த ஒக்கேனக்கல் அருவிதான் 'இந்தியாவின் நயாகரா' என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அருவியாக இல்லாமல், பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளதை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதியுண்டு. சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க புரியாகவும் இந்த ஒக்கேனக்கல் அருவி அமைந்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்குவந்து செல்வது வழக்கம். ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது கோடை காலம் தொடங்குவதால் வார விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதலே ஒகேனக்கல் களைகட்டத் தொடங்கியது. ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். அதேபோல எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளும் இடம், பிரதான அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், கோடை வெப்பத்தை தணிக்க ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள தள்ளுவண்டி கடைகள், உணவகங்கள், பழச்சாறு கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக மையங்களிலும் நேற்று விறுவிறுப்பான வர்த்தகம் நடந்ததால் வியாபாரிகளும் உற்சாகம் அடைந்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.