மகா சிவராத்திரி: ’தமிழர்களின் மர வழிபாடு லிங்க வழிபாடாக மாறியது எப்படி?’ தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்லும் வினோத தகவல்!
சங்க காலப் புலவர்களில் பலர் வணிகர்களாக, ஆசிரியர்களாக, உலோகத் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர். இதனால் அதிகளவு தமிழி கல்வெட்டுகள், தொல்லியல் களங்கள் மதுரையைச் சுற்றி உள்ளன.

பழமையான மர வழிபாடு பின் கல் தூணாக கந்து வழிபாடானது, பின்னர் லிங்க வழிபாடாக மாறியதாக தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை சார்பில் நடந்த ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரா.இந்திரா தொடங்கி வைத்தார். வரலாற்றுத்துறைத் தலைவர் க.வெண்ணிலா அனைவரையும் வரவேற்றார்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் பா.கந்தசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
இரும்பை அறிமுகம் செய்த தமிழர்கள்
தமிழரின் தொன்மை நாகரிகம் என்ற தலைப்பில் குடைவரைக் கோயில்கள், இறை வழிபாடு, தமிழி எழுத்துகளின் சிறப்புகள், இரும்பு உருவாக்கம் பற்றி ராஜகுரு பேசியதாவது, இரும்பை உலகத்துக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்கள் தமிழர்கள் என்பதை சிவகளை அகழாய்வு மூலம் நிரூபித்துள்ளோம். வணிகம், இறை வழிபாடு போன்றவற்றை உலகம் முழுதும் எடுத்துச் சென்றவர்கள் தமிழர்கள். வடஇந்தியாவில் பிரமாண்டமாக பல தளங்களாக குடைவதற்கு எளிய பாறைகளிலும், தமிழ்நாட்டில் கடினமான கிரானைட் பாறைகளிலும் குடைவரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பௌத்தம், ஜைனம், இந்து குடைவரைகள் ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு பெரும்பாலும் இந்து குடைவரைகள் தான் உள்ளன.
மேலும் படிக்க:- தவெக 2ஆம் ஆண்டு விழா: ’விஜய்க்கு முதலமைச்சர் ஸ்டாலினே ரசிகர்தான்!’ அரங்கை அதிரவிட்ட ஆதவ் அர்ஜூனா!
லிங்க வழிபாட்டின் வரலாறு
பழமையான மர வழிபாடு பின் கல் தூணாக கந்து வழிபாடானது. கந்து, மந்து, மன்று, மன்றம், மந்தை, மாந்தை என தமிழ்நாடு முழுவதும் வணங்கப்படுவது கடவுள் சார்ந்த தொடக்கப் புள்ளியாக உள்ளது. கந்து தான் பின்னாளில் லிங்கமாக மாற்றப்பட்டுள்ளது. பல்லவர் கால சிவன் கோயில்களில் லிங்கம் தனியாக சொருகி அமைக்கப்பட்டுள்ளது.
அயன் என்ற சொல் தமிழ்ச்சொல்தான்
மதுரையைச் சேர்ந்த சங்க காலப் புலவர்களில் பலர் வணிகர்களாக, ஆசிரியர்களாக, உலோகத் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர். இதனால் அதிகளவு தமிழி கல்வெட்டுகள், தொல்லியல் களங்கள் மதுரையைச் சுற்றி உள்ளன. தமிழி கல்வெட்டுச் சொற்கள் மூலம் இதை வெட்டியவர்கள் பலவகை வணிக குழுக்கள் இணைந்த மேட்டுக்குடி சமூகத்தினர் எனலாம். மொழியில் புலமை, தொழில்நுட்பம் இவற்றுடன் அதிக அதிகாரமுள்ளவர்களைக் கொண்ட ஒரு கூட்டமாக இவர்கள் இருந்துள்ளனர். வெளிநாட்டு அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளிலும் தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இரும்பு வணிகர், கொல்லர் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், தமிழி கல்வெட்டுகளிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இரும்பைக் குறிப்பிடும் அயன் என்ற சொல் தமிழ்ச்சொல் தான் என்றார்.
மேலும் படிக்க:- ’நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாட்டுக்கு ஒரு சீட் கூட குறையாது!’ கோவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
பாறை ஓவியங்களில் கவனம் செலுத்த வேண்டும்
பின்னர் "பழங்கால மக்கள் வாழ்வியலில் பாறை ஓவியங்கள்" என்ற தலைப்பில் உதவிப் பேராசிரியர் பா.கந்தசாமி பேசியபோது, மத்திய பிரதேசம் பிம்பெட்கா, தமிழ்நாட்டின் கீழ்வாழை, ஆலம்பாடி, செத்தவரை, திருமலை போன்ற இடங்களின் பாறை ஓவியங்கள் பழங்கால மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகின்றன. வேட்டையாடுதல், குழு நடனம், சூரியன், சந்திரன், பல்வேறு விலங்குகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. தற்போது ஒரு சில பாறை ஓவியங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வரலாற்றுத்துறை மாணவியர் பாறை ஓவியங்கள் பற்றிய ஆய்வில் கவனம் செலுத்தவேண்டும் என்றார். விரிவுரையாளர் து.முனீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி சுகன்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் குமரமுருகன், சுரேஷ், அஷ்வத்தாமன் ஆகியோர் செய்தனர்.
