Tamil News  /  Tamilnadu  /  Madurai High Court Issues Notice To Police Dept In Melavalavu Murder Case
உயர் நீதிமன்ற மதுரை கிளை (கோப்புப்படம்)
உயர் நீதிமன்ற மதுரை கிளை (கோப்புப்படம்)

Melavalavu murder case: மேலவளவு கொலை வழக்கு; காவல்துறைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

18 November 2022, 19:32 ISTKarthikeyan S
18 November 2022, 19:32 IST

மதுரை: மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்பட 6 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், விடுதலையான 13 பேருக்கு வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்ததை அடுத்து, கடந்த 1996ஆம் ஆண்டு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பஞ்சாயத்து தேர்தலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர், 2019ஆம் ஆண்டு எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மன்னிப்பு அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணை செய்து, விடுதலையான 13 பேரும் மதுரை மாவட்டத்தை விட்டு வெளியேறி வேலூர் மாவட்டத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் சிறப்பு அமர்வு விசாரணை செய்து வருகின்றது. இந்த அமர்வில் 13 பேருக்கும் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், 13 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்த்து தெரிவித்து கொலையானவர்களின் மனைவிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், 13 பேரை முன்கூட்டியே விடுவிப்பதற்காக வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டதில், பலருக்கு வேறு சில வழக்குகளிலும் தொடர்பு உள்ளது. எனவே முன்கூட்டி விடுதலை செய்ததை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், விடுதலையானவர்களுக்கு வேறு ஏதேனும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

டாபிக்ஸ்