Tamil News  /  Tamilnadu  /  Madurai High Court Issues Notice To Hrce Commissioner
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

வழக்கு நிலுவையில் இருக்கும் போது பணியில் தொடரலாமா?- நீதிபதிகள் கேள்வி

24 November 2022, 15:29 ISTKarthikeyan S
24 November 2022, 15:29 IST

மதுரை: கோயில் ஊழியர்கள் சிலர் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 490 கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம் குமரி மாவட்ட கோயில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது. இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கீழ் 35 அலுவலர்கள், 400 அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

கோயில் நிதியை முறைகேடு செய்ததாக, கோயில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட பலர் தற்போது பணியில் உள்ளனர்.

குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் அன்புமணி, கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் மராமத்து மேற்பார்வையாளர் அய்யப்பன், பகவதி அம்மன் கோயிலின் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, குமரி மாவட்ட கோயில் ஊழியர்கள் சிலர் மீது லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் அவர்கள் எப்படி பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

டாபிக்ஸ்