தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madurai High Court Contempt Proceedings Against Swathi In Gokulraj Murder Case

Gokulraj murder case: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஹைகோர்ட் உத்தரவு

Karthikeyan S HT Tamil
Nov 30, 2022 02:15 PM IST

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கு பிறழ் சாட்சியாக மாறியதை தொடர்ந்து சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

ட்ரெண்டிங் செய்திகள்

தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 10 பேரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா தரப்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த நவம்பர் 25 ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சுவாதியிடம் 23.6.2015-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி போடப்பட்டு காண்பிக்கப்பட்டது. அந்தக் காட்சியில் இருக்கும் பெண் நீங்கள் தானா?, பக்கத்தில் இருப்பவர் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிதிபதிகள் எழுப்பியிருந்தனர். வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிகிறது. அதை உறுதியாக சொல்ல முடியாது என்று பதிலளித்திருந்தார்.

நீதிமன்றம் உங்களிடமிருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது. கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது; சத்தியபிரமாணம் எடுத்த பின்னர் உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்று சுவாதியை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த்வெங்கடேஷ் அமர்வில் இன்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி நேரில் ஆஜராகினார். அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு சுவாதி, கடந்த வாரம் அளித்திருந்த பதிலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று பதிலளித்திருந்தார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், " சி.சி.டி.வி.காட்சிகளை போட்டு காண்பித்தோம். சி.சி.டி.வி., காட்சியில் உள்ள நபர்களை தெரியுமா? என கேட்டோம். ஆனால், சுவாதி தனக்கு தெரியவில்லை என மறுத்து விட்டார். இது எங்களுக்கு வியப்பாக உள்ளது. நீதிமன்றத்தை கேலிக்கு உள்ளாக்கி உள்ளார். விளைவுகளை தெரிந்தே பொய் தகவல்களை வழங்கி உள்ளார்.

கீழமை நீதிமன்றத்தில் ஒரு விதமாக பதில் கூறி உள்ளார். மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கினோம். மீண்டும் அவர் நிலை பாட்டில் உறுதியாக இருந்தார். நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார். அவர் பொய் கூறி உள்ளார் என்பதற்கான போதிய முகாந்திரம் உள்ளது. எனவே, சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. சுவாதி விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்