‘பழனி முருகன் மாநாட்டுக்கு ஒரு நியாயம்! மதுரை முருகன் மாநாட்டுக்கு ஒரு நியாயமா?’ போலீசுக்கு நீதிமன்றம் கேள்வி
”பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு இதே முறையில் அனுமதிக்கப்பட்டபோது, மதுரையில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார்”

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மதுரையில் ஜூன் 10 முதல் 22 வரை முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை காவல்துறையை நடுநிலையாக செயல்பட அறிவுறுத்தியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து காலை மற்றும் மாலை வழிபாடு நடத்த அனுமதி கோரிய இந்த வழக்கில், நீதிமன்றம் இது ஜனநாயக நாடு என்பதை வலியுறுத்தி, காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது.
வழக்கின் பின்னணி
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், அம்மா திடலில் ஜூன் 10 முதல் 22 வரை முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து காலை மற்றும் மாலை இரு வேளைகளில் இரண்டு மணி நேரம் பூஜை நடத்தி, பிரசாதம் வழங்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், காவல்துறை இந்த அனுமதியை மறுத்ததால், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்து முன்னணி அமைப்பு சார்பில் அரசபாண்டி வாதாடிய இந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.