Tamil News  /  Tamilnadu  /  Madurai Bench Issues Notice To Dindigul Private School
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)

Dindigul: விடுதியிலிருந்து மாணவி கீழே விழுந்த வழக்கு: ஹைகோர்ட் புதிய உத்தரவு

22 November 2022, 15:14 ISTKarthikeyan S
22 November 2022, 15:14 IST

மதுரை: திண்டுக்கல் தனியார் பள்ளி விடுதி மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல், தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி அந்த பள்ளி விடுதியின் 3-வது மாடியிலிருந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி தவறி விழுந்திருக்கிறார். தரைப்பகுதியில் புற்கள் வளர்க்கப்பட்டிருந்தால் அதில் விழுந்த மாணவி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தாடிக்கொம்பு போலீ​ஸா​ர் ​விசாரணை மேற்கொண்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த அக்டோபர் 17ஆம் தேதி திண்டுக்கல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளரை தொடர்பு கொண்ட போது மழை காரணமாக விடுதியின் தரை வழுக்கியதாகவும், அதனால் மாணவி கீழே விழுந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். 

ஆனால், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரில், மாணவி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறுமாறு பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மாணவிக்கு முறையான இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, திண்டுக்கல் தனியார் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளி நிர்வாகம் தரப்பிலும் மாணவிக்கு 10 லட்ச ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாணவியன் நிலை தற்போது எவ்வாறு உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

டாபிக்ஸ்