’இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

’இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Published Apr 23, 2025 03:44 PM IST

சைவ மற்றும் வைணவ சமயங்களின் புனித குறியீடுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

’பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?’ உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
’பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?’ உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பொன்முடியின் சர்ச்சை பேச்சு

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி “தப்பா நினைச்சுக்காதீங்க மகளிர். ஒரு விலைமாது வீட்டுக்கு ஒருத்தன் போறான். போகும்போது அங்க அந்த அம்மா கேக்குது, ‘நீங்க சைவமா வைணவமா?’ அப்படின்னு கேக்குது. அவனுக்கு ஒன்னும் புரியல. அவன், ‘பணம் எவ்வளவு? அஞ்சு குடு, பத்து கொடு’ன்னு கேட்டான்னா, ‘ரைட், என்னடா இங்க வந்துருக்கறோம்? நாம ஒரு விலைமாது வீட்டுக்கு வந்து, சைவமா வைணவமான்னு கேக்குறாங்க’ அப்படின்னு கேட்டான். அந்த அம்மா சொல்லிச்சு, சைவம்னா படுத்துக்கிறது, வைணவம்னா நின்னுக்கிறது. நின்னா அஞ்சு, படுத்தா பத்து’ன்னு சொன்னா” என பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியது.

கட்சி பதவி பறிப்பு 

பொன்முடியின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பியும் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக அவர் வகித்து வந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. 

வழக்கு விசாரணையின் பின்னணி

மேலும் பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனுக்கள் கொடுக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த விசாரணையில் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சு அடங்கிய வீடியோவை பார்த்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என டிஜிபிக்கு கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.

சமயங்களை இழிவு செய்துவிட்டார்

இன்றைய விசாரணையில் பொன்முடியின் பேச்சு சமயங்களின் புனித குறியீடுகளை இழிவுபடுத்துவதாகவும், அது வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டின் கீழ் வருவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்ய உத்தரவிட்டார்.

"சைவ-வைணவ சமயங்கள் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. விபூதி பட்டையும், நாமமும் புனிதமானவை. இவற்றை விலைமாது செயலுடன் ஒப்பிட்டு பேசியது ஏற்க முடியாது," என்று நீதிபதி தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, மதரீதியாக புண்படுத்தும் பேச்சு எவரால் வந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார். "அரசியலமைப்பு பதவியில் உள்ளவர் என்பதால், இதற்கு சலுகை வழங்க முடியாது," என்று நீதிபதி கூறினார். 

மன்னிப்பை ஏற்க முடியாது

பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள், அவரது பேச்சு முழுமையாக வெளியாகாமல் ஒரு பகுதி மட்டும் வெட்டி ஒட்டப்பட்டு பரப்பப்பட்டதாகவும், பொன்முடி மன்னிப்பு கேட்டதாகவும் வாதிட்டனர். ஆனால், இந்த வாதங்களை நீதிபதி ஏற்கவில்லை. "உள்ளரங்கக் கூட்டத்தில் பேசியதால் மனதில் பட்டதை பேசலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல. மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாது," என்று தெரிவித்தார்.

போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மேலும், பொன்முடி திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், அவர் மீது போலீசார் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காததை நீதிபதி கடுமையாக விமர்சித்தார். "புகார்கள் பெறப்பட்டதாக அரசு தரப்பு கூறியது, ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற கருத்து ஏற்க முடியாது. மதுரை அமர்விலும் இதே கருத்து தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது," என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது," என்று நீதிபதி உத்தரவிட்டார்.