’சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவு ரத்து!’ உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவு ரத்து!’ உயர்நீதிமன்றம் அதிரடி!

’சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவு ரத்து!’ உயர்நீதிமன்றம் அதிரடி!

Kathiravan V HT Tamil
Published Apr 23, 2025 01:33 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.

’சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவு ரத்து!’ உயர்நீதிமன்றம் அதிரடி!
’சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவு ரத்து!’ உயர்நீதிமன்றம் அதிரடி!

சொத்து குவிப்பு வழக்கு 

1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறை 2002-ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டது. 2007-ல் வேலூர் நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு 

இந்த உத்தரவை எதிர்த்து, 2013-ல் லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, கடந்த ஜனவரி மாதம் நீதிபதி வேல்முருகன் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கையை விளக்கி வாதங்களை முன்வைத்தார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு 

துரைமுருகன் தரப்பு வழக்கறிஞர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் துரைமுருகன் மூலம் சேர்க்கப்படவில்லை என்றும், லஞ்ச ஒழிப்பு துறையின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும் வாதிட்டு, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கினார்.

கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து 

தீர்ப்பில், லஞ்ச ஒழிப்பு துறையின் மறு ஆய்வு மனுவை ஏற்று, வேலூர் நீதிமன்றத்தின் 2007 உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், 1996-2001 காலகட்டத்தில் சொத்து குவைப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்கவும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.