தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Divya Sekar HT Tamil
Jun 07, 2024 02:40 PM IST

Madras High Court : பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாகக் கூறி பணம் பறித்ததாக பதியப்பட்ட வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ட்ரெண்டிங் செய்திகள்

வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்தும், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தும் கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பிரமோத் குமார் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. பிரமோத்குமார் நேரடியாக பணம் பெற்றார் என்பதை சிபிஐ சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டது என  நீதிபதி விவேக் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவை நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாகக் கூறி பணம் பறித்ததாக பதியப்பட்ட வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து 930 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக பாசி நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. சில நாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி, 3 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோருக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.

கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த புகாரின் அடிப்படையில், அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மற்றும் போலீசாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது.

ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து உத்தரவு

இதை எதிர்த்து பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் குமார் சிங், மனுதாரர் லஞ்சம் கேட்டு பெற்றார் என்பதை நிரூபிக்க சிபிஐ தவறி விட்டதாகவும், அவர் சார்பாக மற்றவர்கள் வாங்கினார்கள் என குற்றம் சாட்டியது வெறும் யூகத்தின் அடிப்படையிலானது எனக் கூறி, இந்த வழக்கில் இருந்து பிரமோத் குமாரை விடுவிக்க மறுத்தும், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தும் கோவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் இருந்து பிரமோத் குமாரை விடுவித்தும் நீதிபதி விவேக்குமார் சிங் உத்தரவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்