நூதன போராட்டம் நடத்தி வாங்கி கட்டிக்கொண்ட ஏபிவிபி நிர்வாகிகள்! ஒரு மாதம் அவசர சிகிச்சை பிரிவில் இருக்க உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க கோரி ஏபிவிபி நிர்வாகிகள் போராட்டம் நடத்தி இருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் உள்ளே ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கில் கைதான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த யுவராஜ் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் அதே மருத்துவமனையில் ஒருமாதம் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர்களுக்கு உதவி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அறிவித்து உள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் டெல்லி மற்றும் சென்னையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் சென்னையில் இந்த சம்பவத்தை கண்டித்து ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கோரி மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் செய்த ஏபிவிபியை சேந்த ஸ்ரீதரன் மற்றும் யுவராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி நிர்வாகிகளுக்கு ஜாமீனின் வழங்கியதுடன், அடுத்த ஒருமாத காலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்ற யுவராஜ் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.