Tamil News  /  Tamilnadu  /  Madras High Court Bench New Order To Sathankulam Custodial Death Case
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)

Sathankulam case: சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு; ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

23 November 2022, 17:26 ISTKarthikeyan S
23 November 2022, 17:26 IST

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக 9 பேர்கள் மீது கூட்டு சதி உட்பட விடுபட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி, சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து கிழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2 ஆண்டுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தந்தை, மகனை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸார் என 9 பேரை கைது செய்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏடிஎஸ்பி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்கு பதிந்தது.

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை இரண்டு குற்ற பத்திரிக்கைகள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவின் போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120பி (கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி பிரிவிலும், மேலும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்." என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர்கள் மீது கூட்டு சதி உட்பட விடுபட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து கிழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2வது அறிக்கையின்படி கிழமை நீதிமன்றமே வழக்குகளை சேர்ப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

டாபிக்ஸ்