‘வேங்கை வயல் குற்றவாளிகளை பிடிக்க எவ்வளவு காலம் ஆகும்?’ சிபிசிஐடி.,க்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
‘காவல்துறையினர் இப்போது மூன்று சந்தேக நபர்களை கண்டறிந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41 ஏ இன் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்’

‘வேங்கைவயல் விவகார வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க எவ்வளவு காலம் ஆகும்?’ என சிபிசிஐடி போலீசாரிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2022 டிசம்பரில், வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர் வழங்கும் தொட்டியில் மனித மலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்கள் மீதான விசாரணையின் போது நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியது.
வேங்கைவயல் சம்பவம் நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 2022 டிசம்பர் மாதம், அந்த குடிநீரில் மனித மலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்த விசாரணை நடந்து வரும் நிலையில், இதுவரை அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான விசாரணையில், ‘18 மாதங்கள் ஆகியும் குற்றப்பிரிவு-குற்றப் புலனாய்வுத் துறையால் (சிபி-சிஐடி) குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லையா?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
