Methonal : ஒவ்வொரு ஆண்டும் இத்தனை கள்ளச்சாரய மரணங்களா? உயிருக்கு உலையான மெத்தனால் - அதிர்ச்சி தகவல்கள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Methonal : ஒவ்வொரு ஆண்டும் இத்தனை கள்ளச்சாரய மரணங்களா? உயிருக்கு உலையான மெத்தனால் - அதிர்ச்சி தகவல்கள்

Methonal : ஒவ்வொரு ஆண்டும் இத்தனை கள்ளச்சாரய மரணங்களா? உயிருக்கு உலையான மெத்தனால் - அதிர்ச்சி தகவல்கள்

Priyadarshini R HT Tamil
May 16, 2023 03:44 PM IST

Drinking is Injurious to Health : டாஸ்மாக் சாராயம் 3 மடங்கு விலையேற்றப்பட்டதால், சாதாரண மக்கள் மலிவு விலை கள்ளச்சாராயம் பக்கம் போவர் என்பதை அரசு கணித்து, உரிய கண்காணிப்பை மெத்தனால் பக்கம் திருப்பாதது ஏன்? இறப்புகளுக்கு அரசின் மெத்தனமே இதற்கு முழுக் காரணம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

கள்ளச்சாராயத்தால் இதுவரை 17 பேர் உயிரிழந்தும், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சையிலும் உள்ள நிலையில், ஆரம்ப கட்ட விசாரணையில் உயிரிழப்பிற்கு மெத்தனால் கலப்பே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சட்டப்பேரவையில் தமிழக அரசு, கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராய இறப்புகள் நிகழவில்லை எனக் கூறினாலும், மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2016 - 19 இறப்புகள் இல்லை. 2020ல் 20 இறப்புகள், 2021ல் 6 இறப்புகள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.

மேலும், 2002க்குப் பின் தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து கள்ளச்சாராய இறப்புகளுக்கும் மெத்தனால் தான் காரணம் என்ற செய்தியும் தெரியவந்துள்ளது.

மெத்தானாலைப் பொறுத்தமட்டில், அதன் விற்பனை/கட்டுப்பாடு, தமிழக மதுவிலக்கு சட்டம் 1937ன் கீழ் கொண்டுவரப்பட்டதாலும், Tamilnadu Denatured Spirit, Methyl alcohol (மெத்தனால்) and Varnish (French Polish) Rules,1959ல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாலும், மெத்தனாலின் விற்பனை அரசின் முழு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

எனவே மெத்தனால் எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதை அரசு தெளிவாக கண்காணிக்க முடியும்.

மதுவிலக்கை அமல்படுத்த மறுக்கும்போது, அரசின் முக்கிய வாதமே, அது கள்ளச்சாராயத்தை பெருக்கி, இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதாகும்.

இது அரசின் தோல்வியே, மெத்தனாலை கண்காணிக்கும்/கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் மட்டுமே உள்ளது என்பதால், அரசிற்கு வருமானம் டாஸ்மாக் மூலம் அதிகம் கிடைப்பதால் (44,000கோடி/ஆண்டுக்கு) அரசு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை முறையாக எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து கொண்டுதான் இருந்துள்ளது. அரசுகளின் வருமானம் காரணமாக இதை கண்டுகொள்ளவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் 2 நாட்கள் தாமதமானது. உடனடி உயர் சிகிச்சையும் சிலருக்கு கிடைக்கவில்லை. இது சரிசெய்யப்பட்டிருந்தால் இறப்புகளை குறைந்திருக்கலாம்.

கள்ளச்சாராயத்தால் 17 பேர் இறந்திருப்பது குறித்து பேசினாலும், மதுவால் கடந்தாண்டு தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் பேர் இறந்திருப்பது குறித்து நாம் என் பேச மறுக்கிறோம்.

டாஸ்மாக் சாராயம் 3 மடங்கு விலையேற்றப்பட்டதால், சாதாரண மக்கள் மலிவு விலை கள்ளச்சாராயம் பக்கம் போவர் என்பதை அரசு கணித்து, உரிய கண்காணிப்பை மெத்தனால் பக்கம் திருப்பாதது ஏன்? இறப்புகளுக்கு அரசின் மெத்தனமே இதற்கு முழுக் காரணம்.

காவல்துறையினர் தவிர்த்து, சமூகப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்ட துறைசார்ந்த அமைச்சர் மீதும் நடவடிக்கைகள் தேவை.

கள்ளச்சாராயமோ, நல்ல சாராயமோ நாட்டிற்கு கேடு என்பதால், பூரண மதுவிலக்கை இலக்கு நிர்ணயித்து விரைவில் நடைமுறைப்படுத்தவேண்டும் என் பல்வேறு தரப்பினரும் அரசை குற்றம்சாட்டி, அரசுக்கு கோரிக்கை வைத்தும் வருகின்றனர்.

எக்கியார் குப்பத்தில் இத்தனை பேர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரே, 70 வயது K.சுப்பராயன் என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தது குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி, காரணத்தை கண்டறிந்திருந்தால் இத்தனை இறப்புக்களை தடுத்திருக்க முடியும்.

மெத்தனாலை 100மில்லிக்கு கீழ் சாராயத்தில் கலந்தாலும், அது பார்வை பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும்.

ஆரம்ப கட்ட ஆய்வில் மெத்தனால் இருப்பதாக தகவல் இருந்தாலும், மெத்தனாலைக் கண்டறிய உதவும் வாயு குரோமெட்டோகிராபி பரிசோதனை வசதி செங்கல்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் இருந்ததா? எப்படிமெத்தனால் இருப்பது, எங்கே உறுதிபடுத்தப்பட்டது?

MRI எடுத்து மூளையில் புடாமினல் பகுதியில் இரத்தக் கசிவோடு, ஓட்டம் குறைந்து மூளை பாதிப்பை வைத்தும் மெத்தனால் பாதிப்பை கண்டறிய முடியும்.

மெத்தனால் சாராயத்தில் கலந்திருப்பதை அறிவது எப்படி?

சாராயத்தில் காரமான/உரைப்பான வாசனை (Pungent) வருவது

சாராயத்தில் நெருப்பு வைக்கும்போது மஞ்கள் நிற ஒளி வர்ணம் வந்தால் அதில் மெத்தனால் இருக்க முடியும். சாராயம் மட்டும் இருந்தால் நீல நிற ஒளி வர்ணமும் சேர்ந்திருக்கும்.

8 மில்லி சோடியம் டைக்குரோமேட்டை, 4 மில்லி சல்பூரிக் அமிலத்தில் கலந்து நன்கு கலக்கவும். பின் சாராயம் நிரப்பப்பட்ட பரிசோதனைக் குழாயில் அதில் 10 சொட்டு கலந்து நன்கு கலக்கவும்.

பின் 8-12 இன்ச் முகத்திற்குத் தொலைவில் அதை வைத்து முகர்ந்து பார்க்கவும்.

காரமான/உரைப்பான (Pungent) வாசனை வந்தால் அதில் மெத்தனால் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

அதற்கு பதிலாக, பழங்களின் வாசனை மட்டும் வந்தால் அதில் சாராயம் (எத்தனால்) மட்டுமே உள்ளதென அறிய முடியும்.

எனவே அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மெத்தனால் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இதுபோன்ற உயிரிழப்புகளை எதிர்காலத்தில் தடுக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.